ஓயாத விசில் சத்தமும், கை தட்டலும் ஓய்ந்து பின்னலாடை துணி குடோனாக மாறும் தியேட்டர்கள்

1 week ago 10

திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு திரையரங்குகளுக்கு பார்வையாளர்களின் வருகை குறைந்ததால் தற்போது தியேட்டர்கள் பின்னலாடை துணி குடோன்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களின் வீழ்ச்சியை தொழில்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். நாடகங்கள் அரங்கேறிய நாடக மன்றங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்து வந்தது. அதன்பிறகு சினிமா வளர்ச்சி அடைந்த பிறகு சினிமா தியேட்டர்கள் மக்களின் பொழுதுபோக்கு இடமாக மாறியது. கருப்பு வண்ண படங்கள், கலர் படங்கள், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய படம், டிடிஎஸ் சவுண்ட் என காலத்திற்கு ஏற்றவாறு தியேட்டர்கள் மாற்றம் பெற்று வந்தன.

மண் தரையில் அமர்ந்து படம் பார்த்தது முதல் நாற்காலி, சோபா, தற்போது படுத்து கொண்டே படம் பார்க்கும் வகையில் தியேட்டர்கள் உருமாற்றம் பெற்றுள்ளன. இருப்பினும், தற்போது தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, தியேட்டர்கள் என்பது ஒரு கொண்டாட்டத்திற்கான இடம். பெரிய திரையில் படம் பார்ப்பது பலருக்கும் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், அது எந்த மாதிரியான படங்கள் என்பதை தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையில் இன்று பார்வையாளர்கள் வந்துவிட்டனர். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் அதிக கிராபிக்ஸ் உள்ள படங்களை மட்டுமே தியேட்டர்களில் பார்க்க விருப்பப்படுகின்றனர். சிறிய நடிகர்களின் படங்களும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்களும் தியேட்டர்களுக்கு கொண்டு வரப்படாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகிறது. இதனால், சினிமா பார்வையாளர்கள் தங்கள் கவனத்தை தியேட்டர்களில் இருந்து ஓடிடி தளங்களின் மீது திசை திருப்பி உள்ளனர்.

தொழில் சார்ந்த திருப்பூர் மாநகரில், பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான இடங்கள் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாநகரில் மாநகராட்சி பூங்காக்கள் தவிர பெரிய அளவில் பொழுதுபோக்கு இடங்கள் ஏதுமில்லை. இதன் காரணமாக, தியேட்டர்கள் மட்டுமே முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்தன. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய திருப்பூரில் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் இன்று தியேட்டர்களுக்கு செல்வது குறைந்துள்ளது.‌ இதனால், தியேட்டர்கள் திருமண மண்டபங்களாகவும், குடோன்களாகவும் மாற்றப்பட்டு வருகிறது.‌

அந்த வகையில்தான் திருப்பூரில் அனைவராலும் அறியப்பட்ட நடராஜ் தியேட்டர் மற்றும் சாந்தி தியேட்டர் ஆகியவை பின்னலாடை துணி குடோன்களாக மாற்றப்பட்டுள்ளன. சரிவிலிருந்து மீண்டு வரும் திருப்பூர் தொழில்துறை, நாளுக்கு நாள் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. ஆனால் திருப்பூர் மாநகரில் தற்போது தியேட்டர்களை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அவற்றை வாடகைக்குவிட முடிவெடுக்கின்ற சூழலில் தொழில்துறையினர் அதனை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டி வருகின்றனர். காரணம், மாநகர பகுதிகளுக்குள் குடோன்கள் அமைக்கும் அளவிற்கான பெரிய இடங்கள் இல்லாததும், போக்குவரத்து வசதியையுமே முக்கிய காரணங்களாக கருதுகின்றனர்.

இதன் காரணமாக, பழமை வாய்ந்த நடராஜ் மற்றும் சாந்தி தியேட்டர்கள் தற்போது குடோன்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றை தங்கள் அடையாளமாகவும், தொழில்துறையினர் மாற்றி கொள்கின்றனர். இது குறித்து குடோன்களாக மாற்றப்பட்ட தியேட்டர் உரிமையாளர் கூறுகையில், ‘‘பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு திரையிடப்படும் போதெல்லாம் ரசிகர்களால் தியேட்டர் திருவிழா மைதானமாக மாற்றப்பட்டது. ஓயாத விசில் சத்தமும் கை தட்டலும் தற்போது ஓய்ந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த தியேட்டரை இடித்து தரைமட்டமாக்க மனம் இல்லை. இருப்பினும், பொருளாதார காரணத்திற்காக தற்போது அவை இடிக்கப்படாமல் எந்த மாறுதலும் செய்யப்படாமல் அப்படியே வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. திரைப்படம் ஓடாமல் இருந்தாலும்கூட இன்னும் திரையரங்காக நகரின் முக்கிய அடையாளங்களாக இருந்து வருகிறது’’ என்றார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் கூறுகையில், ‘‘பொதுமக்கள் தற்போது வசதியை எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். மூன்று மணி நேரம் ஒரு திரைப்படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கும்போது அவர்கள் முழு வசதியை எதிர்பார்க்க தொடங்கினர். ஏசி, அமர்ந்திருக்கும் இருக்கை, கழிவறை, கேன்டீன் உள்ளிட்ட அனைத்தும் நல்ல முறையில் இருப்பதை எதிர்பார்க்கின்றனர். அதனால், அவ்வப்போது தியேட்டர்களை காலத்திற்கு ஏற்ப பராமரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஈடு கொடுக்க முடியாததால் சில தியேட்டர்கள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தியேட்டர் தரும் உணர்வுகளை விரும்பக்கூடிய பார்வையாளர்கள் தியேட்டர்களை நோக்கி வந்து கொண்டுதான் உள்ளனர்’’ என்றார்.

18 சதவீதம் ஜிஎஸ்டி
ஒன்றிய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பு பல்வேறு தொழில்துறையையும் நலிவடைய செய்தது. அதில் ஒன்று திரையரங்குகள்.‌ 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதம் எனவும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்களுக்கு 18 சதவீதம் வரை எனவும் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. பலமுறை தியேட்டர் உரிமையாளர்கள் அதனை குறைக்க வலியுறுத்தியும்கூட ஒன்றிய அரசு கவனம் செலுத்தாததும்கூட தியேட்டர்கள் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

The post ஓயாத விசில் சத்தமும், கை தட்டலும் ஓய்ந்து பின்னலாடை துணி குடோனாக மாறும் தியேட்டர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article