ஓணம், ஆவணி மாத கடைசி முகூர்த்தம்: மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்வு

5 days ago 7

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு, மதுரையை சுற்றி உள்ள கிராமங்களான எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன்குண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் மல்லிகை பூக்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதுதவிர, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு மல்லிகை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்கள் அனைத்தும் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மல்லிகை பூ விலை உச்சத்தை தொடும்.

இந்த நிலையில் மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் மல்லிகை விளைச்சல் அதிகமாக இருந்ததன் காரணமாக, கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை குறைவாக இருந்தது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளில் கூட விலை குறைவாகவே இருந்தது.

இதற்கிடையே, ஆவணி மாத கடைசி முகூர்த்தம், ஓணம்பண்டிகையையொட்டி நேற்று திடீரென மல்லிகை பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.. அதன்படி, மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை காலை நேரத்தில் ரூ.2 ஆயிரத்து 500 எனவும், நேரம் செல்ல செல்ல ரூ.1500 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல், முல்லை ரூ.800, பிச்சி ரூ.600, சம்பங்கி ரூ.300, நாட்டு சம்பங்கி ரூ.500, செவ்வந்தி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவணி கடைசி முகூர்த்தம் என்பதால் நேற்றும், இன்றும் இதே விலை நிலவரம் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article