
ஜஜ்பூர்,
ஒடிசாவில் ஜஜ்பூர் மாவட்டத்தில் பாரி என்ற பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக ஜஜ்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று வாரிய தேர்வு நடைபெற்ற நிலையில் அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர், மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட சித்ரகொண்டா நகரில் அரசால் நடத்தப்படும் உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுகளை எழுதி முடித்திருக்கிறார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த மாணவி பள்ளிக்கு வந்து, வகுப்புகளில் கலந்து கொண்டதுடன், தேர்வுகளையும் எழுதியுள்ளார். ஆனால் அவர் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை பள்ளி அதிகாரிகள் யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், இந்த விவகாரம் பற்றி உள்ளூர் போலீசார் மற்றும் மாவட்ட நல அதிகாரி ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், மால்கன்கிரி மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையாக அந்த அரசு பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். நர்ஸ் ஒருவர் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோன்று மாவட்ட நல அதிகாரி பரிந்துரையின் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர் அஜித் குமார் மத்காமியும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
ஒடிசாவில், ஒரே வாரத்தில் 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.