ஏழை மாணவர்களுக்காக இலவச நூலகம் அமைத்த நெசவாளர்

1 week ago 9

‘‘மாற்றம் என்பது சொல் அல்ல செயல்’’
மனித வாழ்க்கைக்குக் கல்வி, செல்வம், வீரம் ஆகிய 3 செல்வங்கள் மிகவும் இன்றியமையாதது. இதில், அனைவரையும் உயர்ந்த நிலையை அடையச் செய்யும் தனிச்சிறப்பு கல்விக்கு மட்டுமே உண்டு. யாராலும் அழித் தொழிக்க முடியாத பெருஞ்செல்வம் கல்வி. அத்தகைய சிறப்புகளைப் பெற்ற கல்வியைப் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலமாக இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடையச் செய்யவும், நெசவாளர் ஒருவர் தனது வீட்டையே நூலகமாக மாற்றியிருப்பது சமூக ஆர்வலர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்காசி அருகே புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் கோயில் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த 33 வயது இளைஞர் திருமலைக்குமார். கைத்தறி நெசவுத்தொழில் செய்துவருகிறார். இவர் பள்ளியில் படித்த காலத்தில் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை அடைந்த திருமலைக்குமார் எப்படியாவது பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், என்று வெறித்தனமாக படிக்கத் தொடங்கியுள்ளார்.

விடாமுயற்சியுடன் பொதுத்தேர்வை எழுதி அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத நிலையில், குடும்பத்தினருடன் சேர்ந்து கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். அதேச்சமயம் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியவர் அந்த நற்பழக்கத்தைத் தன்னோடு நிறுத்திக்கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள இளைஞர்களையும் பின்பற்றச் செய்வதற்காகத் தனது வீட்டில் நூலகமே அமைத்துள்ளார்.

சொந்த வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்துவரும் இளைஞரின் இந்த உன்னதமான சிந்தனை தோன்றிய காரணத்தையும் செயல்படுத்திய விதத்தையும் நெசவாளர் திருமலைகுமார் கூறுகையில், ‘‘நான் 1998ம் ஆண்டு 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்ததால் வீட்டில் முடங்கினேன். நெசவுத் தொழிலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் மனவேதனை அடைந்தேன். ஒருநாள் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தபோது ஐஏஎஸ் இறையன்பு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் ‘‘புத்தகம் படிப்பது சுகமே’’ என்ற தலைப்பில் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக பேசினார்.

அவரின் பேச்சு எனக்குள் புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. வேலை செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு புத்தகங்கள் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். புத்தகம் வாசிப்புப் பழக்கம் என்னுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய புதிய புத்தகங்களை வாங்கிப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. புத்தகங்கள் வாங்கவேண்டும், என்ற ஆசை என்னை நெசவுத்தொழிலில் முழுமையாக ஈடுபடச் செய்தது. வேலை முடிந்து ஓய்வு நேரங்களில் நூலகம் சென்று புத்தகங்கள் வாசிப்பதைத் தொடர்ந்தேன். நான் படித்த புத்தகங்களை மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அதேபோல், அவர்களிடம் ஏதேனும் புத்தகங்கள் இருந்தால் அதனை வாங்கி வந்து படிப்பேன். இந்த பழக்கம் நூலகத்திற்கு வரும் இளைஞர்களிடையே விரிவடைந்தது.

இதனால் வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தில் பொதுஅறிவு, அறிவியல், சமூக அறிவியல், வரலாற்று நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த இலக்கணம் மற்றும் இலக்கிய நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான வினா-விடைப் புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்தேன். தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த நற்பழக்கத்தைத் என்னோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள இளைஞர்களையும் பின்பற்றச் செய்தேன்.’’ என்கிறார் திருமலைக்குமார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘அடுத்த கட்டமாக ‘இன்டர்நெட் உதவியுடன் அறிய புத்தகங்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தேன். அந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். நான் படித்து முடித்த புத்தகங்களை அக்கம் பக்கத்தில் உள்ள படித்த இளைஞர்கள், நண்பர்கள், அரசுப் பணியில் சேர வேண்டும், என்று லட்சிய வேட்கையோடு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏழை, எளிய மாணவர்களுக்கு படிக்கக் கொடுத்தேன். அதனை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மாணவர்களும் புத்தகம் வாசிப்பில் முழுமையாக ஈடுபட்டனர். நாளடைவில், வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்தது. அலமாரி, பீரோ, எனக் காணும் இடமெல்லாம் புத்தகங்கள் நிறைந்து மினி நூலகம் போன்று காட்சியளித்தது.

இதனை அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ள இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தகங்கள் வாசிக்க எங்கள் வீட்டிற்கு வரத் தொடங்கினர். இதனால் படிக்கும் ஆர்வத்தோடு வரும் மாணவர்களுக்காக வீட்டிலேயே நூலகம் அமைக்க முடிவு செய்தேன். அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு வீட்டின் மேல் மாடியில் தென்னை ஓலையைக்கொண்டு மேற்கூரை அமைத்து. நூலகத்திற்கு ‘‘அறிஞர் அண்ணா அறிவுக்கூடம்’’ என்று பெயர் வைத்தேன். தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஓலைக் குடிசை சிதிலமானதால் அதனை அகற்றி தகரக் கொட்டகை அமைக்க முடிவு செய்தேன்.

அதனைத் தொடர்ந்து, நண்பர்கள் உதவியுடன் ₹1 லட்சம் கடன் பெற்று வீட்டில் மேல்மாடியில் தகரக் கொட்டகை அமைத்தேன். மீதமிருந்த பணத்தைக் கொண்டு பல்வேறு இடங்களிலும் நடந்த புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று ஏராளமான புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கினேன். தற்போது, 1500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன. புத்தகம் வாசிக்கும் புதிய அனுபவத்தைப் பெற நினைத்த பொதுமக்கள் பலரும் திருமலைக்குமாரின் வீட்டில் உள்ள நூலகத்திற்கு வரத் தொடங்கினர்.

தற்போது, நூலகத்தில் தன்னம்பிக்கை தரும் கட்டுரை நூல்கள், தலைசிறந்த தலைவர்கள், ஆன்மிகம், சிறுவர்களுக்கான நீதிநெறிக் கதைகள், புராண நூல்கள், பொது அறிவுப் புத்தகங்கள், கலை மற்றும் தொழில்நுட்பப் பிரிவு சார்ந்த புத்தகங்கள், இலக்கணம், இலக்கியம், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ஏராளம் உள்ளன. இந்தப் புத்தகங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏழை எளிய இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து படித்து பயனடைந்து வருகின்றனர்.

இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்த 3 இளைஞர்கள் தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாகவும், தீயணைப்புத் துறை, ராணுவம் ஆகியவற்றில் இருவரும், கிராமநிர்வாக அலுவலர்களாக இருவரும் தேர்வாகி அரசுப் பணியில் உள்ளனர். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதைப் பெருமையாக கருதுகிறேன். ‘‘மாற்றம் என்பது சொல் அல்ல செயல்’’ என்றார் திருமலைக்குமார் மகிழ்ச்சியுடன்.

– இர.மு.அருண்பிரசாத்

அரசு சார்பில் புத்தகங்கள் வழங்க வேண்டும்
அறிஞர்அண்ணா அறிவுக்கூடத்தில் தற்போது 1500 புத்தகங்கள் உள்ளன. தற்போது, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் புதிதாக வெளிவந்துள்ள நிலையில், அவற்றை வாங்க போதிய அளவில் பொருளாதார வசதி இல்லாததால் புத்தகங்களை வாங்க முடியவில்லை. எனவே, அரசு சார்பில் நூலகத்திற்குப் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கினால் ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆளுக்கொரு புத்தகம் வழங்கினால் நூலகத்திற்கு தேவையான அனைத்துப் புத்தகங்களும் கிடைத்துவிடும். அதன் மூலமும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று திருமலைக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

The post ஏழை மாணவர்களுக்காக இலவச நூலகம் அமைத்த நெசவாளர் appeared first on Dinakaran.

Read Entire Article