
புதுடெல்லி,
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு 12-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து, மார்செய்லே நகரில் முதன்முறையாக இந்திய தூதரக தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி இருவரும் அந்நகருக்கு செல்கின்றனர்.
இதன்பின்பு, அவர்கள் இருவரும் சர்வதேச வெப்பஅணுக்கரு உலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று அதனை நேரில் பார்வையிடுகின்றனர்.
இதேபோன்று, முதலாம் உலக போர் மற்றும் 2-ம் உலக போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக மஜார்குவெஸ் நகரில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போர்களில் பங்கேற்று வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
இதன்பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் அழைப்பையேற்று, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார். அந்நாட்டில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.