எலி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்… உஷார்!

2 hours ago 1

சென்னை குன்றத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவருமே இப்படி ஒரு ஆபத்து இருப்பது தெரியாமல் தான் கொசு மருந்து துவங்கி கரப்பான்களை , பூச்சிகளை விரட்டும் ஸ்பிரே, எலி தொல்லைக்கான மருந்துகள், என அத்தனையையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற போதுமான விழிப்புணர்வு இல்லாமல் தான் எல்லோருமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு சில வீடுகளில் அதிகம் ஸ்பிரே அடித்து ஒரே நாளில் கரப்பான்களை விரட்ட மெனக்கிடுவதை பார்த்திருப்போம். கிட்டத்தட்ட காற்றில் அதன் நெடி நம் சுவாசக் குழாய் வரையிலும் இடையூறு செய்யும். பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ஸ்பிரே இவற்றை வீடுகளில் பயன்படுத்தும் பொழுது எப்படியான கட்டுப்பாடு களையும் வழிமுறைகளையும் கடை பிடிக்க வேண்டும் சொல்கிறார் நுரையீரல் மருத்துவர் டாக்டர் கார்த்திக் நாகராஜு ( MBBS.,MD.,DNB.,DM (Pulmonary Medicine)IDCCM.,EAACI., Fellowship in Allergy & Clinical Immunology, consultant Pulmonologist & sleep specialist)

‘இந்த உயிரிழப்பை தற்செயலான விஷம் (accidental poisoning) என வகைப்படுத்துவதுண்டு. அதாவது எந்த திட்டமிடலும் இல்லாமல் யாருக்குமே தெரியாமல் இப்படி ஒரு உயிர் சேதம் நடப்பது.வேதியியல் சுவாசிப்பு விஷம் (chemical inhalation poisoning) என்று வகைப்படுத்துவதுண்டு. திரவ மற்றும் பவுடர் அடிப்படையில் இந்த எலி மருந்துகள் வருகின்றன. இதில் பவுடர் அடிப்படையில் இருக்கும் மருந்துகள் ஒரு அறையில் வைத்தவுடன் காற்றில் இருக்கும் ஈரப்பதம் அல்லது நீர் துகள்களுடன் இணைந்து வேதியியல் மாற்றத்திற்கு உட்பட்டு விஷ வாயுவாக அறை முழுக்க பரவி இருக்கும். இந்த வாயு ஒரு மில்லியனுக்கு 50 துகள் ( 50ppm – 50 particle per million) என்கிற விதத்தில் பயன்படுத்தப்படும் பொழுது எலிகள் மற்றும் சிறு பூச்சிகளைத் தவிர மனிதர்களுக்கு ஆபத்தாக இருக்காது. இந்த அளவை தாண்டும் பொழுது தான் மூச்சுத் திணறல், நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகள் உருவாகி மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும். மேலும் குழந்தைகளில் இது உயிருக்கே ஆபத்தை உருவாக்கும். குறிப்பாக பாஸ்பைன் ( phospine) வாயு 100ppm அளவைத் தாண்டும் பொழுது மனிதர்களுக்கும் குமட்டல், வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் துவங்கி உயிர் பறிபோகும் அபாயம் வரை உண்டாக்கும்’ வீடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும்போது எப்படி பயன்படுத்த வேண்டும் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்? தொடர்ந்தார் டாக்டர் கார்த்திக் நாகராஜு.

‘குடோன் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இப்படியான எலி கொல்லிகளை அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்க இருக்கிறார்கள் என்றால் அடுத்து ஓரிரு தினங்கள் விடுமுறையாகவும் மேலும் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டும் செல்வர் ஆனால் இங்கே அப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லாத காரணத்தால் தான் இரண்டு சிறு குழந்தைகள் உயிர் போயிருக்கிறது. பொதுவாகவே பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் கொசுவர்த்தி சுருள் உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டில் மார்க்கெட்டில் கிடைக்கும் அத்தனை ப்ராடக்டுகளும் அதீத ஆபத்தை விளைவிப்பதில்லை. ஆனாலும் வீடுகளில் கரப்பான், கொசு மற்றும் பூச்சிகளை விரட்ட பயன்படுத்தும் ஸ்பிரே அடிப்படையிலான மருந்துகளை பயன்படுத்தும் பொழுது வீட்டில் கொசு உள்ளே வராமல் தடுக்க ஜன்னல்கள் கதவுகளில் அடிக்கும் கொசுவலை வசதிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நன்கு மூடிவிட்டு வாசல் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து இப்படியான மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் ஸ்பிரே அல்லது கேஸ் அடிப்படையிலான மருந்துகளை பயன்படுத்துகிறோம் என்றாலே குறைந்தது 8 மணி நேரம் அளவிற்கு ஏசி அறையையும் திறந்து வைத்து ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது. பெரும்பாலும் ஏசி அறைகள் தான் எவ்வித காற்றும் உள்ளே வராமல் மேலும் வெளியே செல்லாமலும் இருக்கும் என்பதால் ஏசி அறைகளில் மருந்துகள் பயன்படுத்தும் பொழுது அதிகம் கவனம் எடுத்துக் கொள்ளவும்’ எவ்வளவு கால இடைவெளியில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் எலி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

‘சாதாரண கொசுவர்த்தி சுருள் முதற்கொண்டு சிறு குழந்தைகளுக்கு ஆபத்தை கொண்டு வருபவை தான். அதிலும் ஏசி அறைகளில் இப்படியான காற்றுடன் கலக்கக்கூடிய ஸ்பிரே மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அதேபோல் தினம் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை வீடுகளில் பயன்படுத்தும் பொழுது நாமும் தொடர்ந்து அவற்றை சுவாசிக்கிறோம் கிட்டத்தட்ட இது மெதுவான விஷத்திற்கு சமம். என்பதால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறைக்கு மேல் வீடுகளில் இப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் எலிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ளலாம். இல்லையேல் காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய எலி பிடிக்கும் பெட்டிகள், பூச்சிகளை விரட்ட மஞ்சள், கற்பூரம் மற்றும் வேப்பிலை கலந்த நீர் தெளிப்பு போன்ற இயற்கையான கிருமி நாசினிகளை நீரில் கலந்து வீடு முழுக்க தெளித்து விடலாம். இதில் என்ன இருக்கு என யோசிக்காமல் குழந்தைகளையும் வயதானவர்களையும் குறிப்பாக வீட்டில் நுரையீரல் பலவீனமாக இருப்பவரையும் நினைவில் கொண்டு இப்படியான பூச்சிக்கொல்லிகள் மற்றும் எலி மருந்துகளை பயன்படுத்துவது நல்லது.
– ஷாலினி நியூட்டன்

 

The post எலி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்… உஷார்! appeared first on Dinakaran.

Read Entire Article