எம்பார் என்பார்!

3 months ago 11

திருநட்சத்திரம்: 10-2-2025

ஸ்வாமி ராமானுஜர், தன் உயிராய் கொண்டாடிய திருநாள், “தை புனர்பூசம்’’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஸ்வாமி ராமானுஜரின் பாதங்களே, திருபாத நிழல் என்றே கொண்டாடப்படும் எம்பார், திரு அவதாரம் செய்த தினம் தை புனர்பூச நன்னாளில்தான். தம் உயிரை பணயம் வைத்து ராமானுஜரின் உயிரை காத்து, ஸ்வாமி ராமானுஜரின் திருப்பெயரான எம்பெருமானார் என்ற பெயரில் பாதி திருநாமம் வரும் படியாக எம்பார் என்றே பெயர் சூட்டப்பட்ட பெருமையும் இவருக்கு உண்டு. இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி, அதாவது தை புனர்பூச திரு நாளை இவர் அவதரித்த மதுரமங்கலம், மிக மதுரமாக கொண்டாட இருக்கிறது. அடுத்த தை புனர்பூசம், எம்பார் இப்பூவுலகில் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிறதே என்ற குதூகலம், இப்பொழுதே மதுரமங்கல வாசிகளிடம் சுவாசிக்க துவங்கிவிட்டன.

ஸ்வாமி ராமானுஜர், திரு அவதாரம் செய்த பெரும்புதூருக்கு வெகு அருகில் இருக்கக் கூடிய ஒரு அழகான சிற்றூர்தான் மதுரமங்கலம். ஸ்வாமி ராமானுஜரின் சித்தி மகனாக 1026ஆம் ஆண்டு பிறந்து, ராமானுஜரோடு கூடவே யாதவ பிரகாசர் என்பவரிடம் பாடம் பயின்றார், கோவிந்த பட்டர் எனும் எம்பார். தாம் சொல்லும் விளக்கங்களை தாண்டி, ராமானுஜர் தன்னுடைய அறிவுக்கூர்மையால் பிரகாசித்து விளக்கங்களை வேறு விதமாக சொல்வதையும், அதனால் ராமானுஜரின் புகழ் மேலோங்கி வருவதையும் யாதவ பிரகாசரால் பொறுத்து கொள்ள முடியாமல் போனது.

தம் சிஷ்யர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கொண்டு, காசி யாத்திரைக்கு போக திட்டமிட்டு, அங்கே கங்கையில் ராமானுஜரை மூழ்கடித்து கொன்றுவிட வேண்டும் என யாதவ பிரகாசர் தீட்டிய சதி திட்டத்தை அறிந்து கொண்டார், எம்பார். பதினைந்து நாட்கள், யாதவ பிரகாசர் தம் அத்தனை சீடர்களையும் அழைத்து கொண்டு விந்திய மலை பகுதியில் நடைப் பயணத்தை தொடர்ந்தார். அடர்ந்த விந்திய மலை வனப்பகுதியில் அனைவரும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த போது, ராமானுஜரிடம் மெதுவாக சென்ற எம்பார், யாதவ பிரகாசரின் சதி திட்டத்தை அவரிடம் சொல்லி, ராமானுஜரை உடனடியாக அந்த இடத்தை விட்டு போகும்படி கேட்டுக் கொண்டார்.

எம்பார் சொன்னதுமே மனது நிறைய குழப்பத்துடனும், அதே சமயம், காஞ்சி
வரதனின் மீது அலாதி நம்பிக்கையும் கொண்டு, ராமானுஜர் அந்த இடத்தை விட்டு
சென்றார். கங்கை நீரில் மூழ்க இருந்த வரை காஞ்சி வரதனின் கருணையில்
மூழ்க செய்த பெருமை எம்பாரையே சாரும்.

யாதவ பிரகாசரோடு காசிக்கு சென்று அங்கே கங்கையில் புனித நீராடி எழுந்த எம்பாரின் கைகளில் சிவலிங்கம் வர, அதை பார்த்த யாதவ பிரகாசர், “உம்மை தேடி ருத்ரனே வந்துள்ளார். எனவே, இனி நீ சிவ பூஜைகளை சிரத்தையாக செய்து கொண்டு சிறந்த சிவ பக்தனாக மாற வேண்டும் என்றுகூற, உடனே அன்று முதல் காளஹஸ்தியில், உளங்கைக் கொணர்ந்த நாயனார் என்றே அழைக்கப்பட்டு சிவ ஆராதனையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டார், கோவிந்த பெருமாளான எம்பார்.

சன்னியாசம் பெற்று திருவரங்கம் வந்தடைந்த ராமானுஜருக்கோ, தமக்கு உண்மையாக கைங்கர்யம் செய்யக்கூடிய எம்பார் அருகில் இல்லாததை எண்ணித் தவித்து, தன் தாய் மாமாவான பெரிய திருமலை நம்பிகளிடம் எம்பாரை எங்கிருந்தாலும் அழைத்து கொண்டு வரும் படி கேட்க, காளஹஸ்திக்கு சென்று எம்பாரை திரும்பவும் வைணவத்திற்கு மாற்றி எம்பெருமானாரான ராமானுஜரிடம் சேர்த்தார், பெரிய திருமலை நம்பி. கோவிந்த பட்டராக இருந்தவர், எம்பாராக பெயர் மாற்றம் செய்யப்பட்டதும், அப்போது நிகழ்ந்ததுதான்.

ஒரு மிக சிறந்த சிஷ்யனாகவும், மிகச் சிறந்த குருவாகவும் இருந்து காட்டி இருக்கிறார் எம்பார். கூரத்தாழ்வானின் இரண்டு மகன்களுக்கும் மிகச் சிறந்த குருவாக இருந்து அவர்களுக்கு வழிக்காட்டியவர் எம்பார்தான். எம்பாரின் வாழித்திருநாமமே எம்பாரின் விசேஷ கல்யாண குணங்களை எடுத்துரைப்பதாய் அமைந்திருப்பது ஓர் அற்புதமே.

“பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
(தாமரை மலரில் இருக்கும் மஹாலக்ஷ்மியின் அருளால் கைங்கர்ய செல்வம் பெற்றவர் வாழ்க)
பொய்கை முதல் பதின்மர் கலைப்
பொருளுரைப்போன் வாழி
(பொய்கை ஆழ்வார் முதல் மற்ற ஆழ்வார்கள் சாதித்த திவ்ய பிரபந்தங்களுக்கு அற்புதமாக விளக்கம் அளிப்பவர் வாழ்க)
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
(மா என்பதற்கு விலங்குகள் என்றும் ஒரு பொருள் உண்டு. விலங்குகளும் சோலைகளும் சூழ்ந்த பெரும்புதூரில் திருஅவதாரம் புரிந்த ஸ்வாமி ராமானுஜரின் மலர் பாதங்களில் தொண்டு புரிந்தவர் வாழ்க)
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே

(தை மாதத்தை தான் மகர மாதம் என்பர். அப்படி உயர்வான மகர மாதமான தை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் தோன்றியவர் வாழ்க)
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே

(காளஹஸ்தியில் இருந்தவரை தேவும் எப்பொருளும் படைக்க என்ற பிரபந்த பாசுரத்தை சொல்லி தான் திரும்பவும் வைணவத்திற்கு வரவழைத்தார் பெரிய திருமலை நம்பி. அப்படி அந்த பாசுரத்தை கேட்டு திரும்பி வைணவம் வந்தவர் வாழ்க)
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
(தம் குருவான பெரிய திருமலை நம்பி மீது பெரிய பக்தி கொண்டவர் வாழ்க)
பாவையர்கள் கலவியருள் பக்லொன்றான் வாழியே

(இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு காட்டாமல், இரவு பொழுது கூட பகல் பொழுதை போல வெளிச்சமாக கண்டவர் வாழ்க. இரவில் கூட திருமாலின் திருவுருவை பிரகாசமாக காணப்பெற்றவர் வாழ்க)
பட்டர் தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே’’

(கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டரின் ஆசார்யர். மதுரமங்கலத்தில் இன்றளவும் ஸ்வாமி எம்பாரின் சந்நதியில் சாற்றப்படும் சடாரியில் பராசர பட்டரின் திருஉருவம் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.)தை புனர்பூச நன்நாளில், ஸ்வாமி ராமானுஜரின் பாத நிழலாய் இருந்த ஸ்வாமி எம்பாரை மனதில் தியானிப்போம். எல்லா வித நன்மைகளையும் இனிதே பெறுவோம்.

நளினி சம்பத்குமார்

The post எம்பார் என்பார்! appeared first on Dinakaran.

Read Entire Article