வேலூர்: ‘மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், சி.பொன்னையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக வேந்தர் கோ.விசுவ நாதன் பேசியதாவது: நான் திமுகவில் இருந்து தாமதமாகத்தான் அதிமுகவுக்கு வந்தேன். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது அண்ணாயிசம் கொள்கையை தெரிவித்தார். அதில் முக்கியமான ஒன்று மொழிக்கொள்கை. ஒரு மொழியின் முன்னேற்றம் மற்றமொழிக்கு அழிவை ஏற்படுத்திவிடக் கூடாது. மொழியின் முன்னேற்றம் மக்கள் விருப்பமாக இருக்கவேண் டுமே தவிர சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது.