எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றும் கலை

1 hour ago 2

ஒவ்வொரு எதிர்மறை விஷயத்திலும் ஒரு நேர்மறை விஷயம் மறைந்து இருக்கும். அதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதற்கான பயிற்சிக்களம்தான் ராமாயணம்.

ராமாயணம் பல சந்தர்ப்பங்களில் ஒருவன் நேர்மறையாக செயல்படும் வித்தையைச் சொல்லித் தருகிறது. நேர்மறை மனநிலை (Positive mind) என்பது விரும்பத்தகாத விஷயமாக இருந்தாலும், அதை விரும்பத்தக்கதாக மாற்றிக் கொள்ளும் திறன். இதை நாம் ராமனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு விதிக்கப்பட்டது காட்டில் வாழுகின்ற வாழ்க்கை (எதிர்மறை). இந்த வாழ்க்கையே அவன் மகிழ்ச்சியோடு (நேர்மறை) ஏற்றுக் கொள்கின்றான். கோசலையிடம் ‘‘அப்பா என்னை மோசமானககாட்டுக்குப் போ என்று சொல்லிவிட்டார் என்று சொல்லவில்லை. அதைவிட,” அப்பா சொன்னதாக கைகேயிதான் சொன்னாள்” என்றும் சொல்லவில்லை. கஷ்டமான விஷயத்தை கஷ்டப்படாமல் எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறான்.

பாடலைப் பாருங்கள்.
“ஆண்டு ஓர் ஏழினோடு ஏழு அகன் கானிடை
மாண்டமா தவத்தோருடன் வைகி, பின்
மீண்டும் நீ வரல் வேண்டும்
என்றான் என்றான்’’

“என்றான் என்றான்” என்ற வார்த்தை எவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது பாருங்கள். முதலில் சொல்லப்பட்ட என்றான் என்பது தசரதன் சொன்னது. இரண்டாவது என்றான் என்பது தசரதன் சொன்னதாக ராமன் சொன்னது. அங்கே கைகேயி 14 ஆண்டுகள் என்று சொன்னால் மிகவும் நீளமாக இருக்குமோ என்று கருதி ஏழிரண்டாண்டில் வா என்று சொன்னாள். அந்தச் சொல்லை அப்படியே பயன்படுத்துகின்றான் ராமன். 7X2 என்று கைகேயி
பெருக்கல் கணக்கு சொன்னாள். ராமன் கூட்டல் கணக்கு (7+7) சொல்கின்றான்.

அவள் கஷ்டமான காடு என்று சொன்னாள். ராமன் அதையே நேர் மறையாக “அகன் கானிடை” என்று பெருமையாகச் சொன்னான். ‘‘காட்டில் தவம் செய்பவர்கள் இருப்பார்கள் அவர்களோடு சில காலம் தங்கி இருந்து பிறகு வா என்று சொன்னார்.” இரண்டு இடங்களிலும் சொன்ன செய்தியிலும் சொற்களிலும் மாற்றமில்லை. சொல்லுகின்ற முறையில்தான் மாற்றம். பாவனையில் (voice modulation) தான் மாற்றம். இவ்வளவு பக்குவமாகச் சொல்லியும் கோசலையின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. ராமனுக்கு மகுடம் கிடைக்காதது வருத்தம் இல்லை. ஆனால் காட்டுக்கு அனுப்புவது என்ன நியாயம்? பெற்ற பிள்ளையைப் பிரிய வேண்டும் என்ற நிபந்தனையை எந்தத் தாய் தான் ஏற்றுக் கொள்வாள்.

எனவே, கோசலையின் நிலை மாறியது. மற்ற பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுக்கிற தாயாக இருந்தாலும்கூட தன்னுடைய பிள்ளைக்கு, தீங்கு வருகின்றபொழுது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அது இயல்பான தாய்மை உணர்வுக்கு ஒத்துவராது. அதனால் கோசலை துடித்தாள். துவண்டாள். அழுதாள் அரற்றினாள். நிலத்தில் விழுந்தாள். அவளுடைய கவலை அச்சமாக மாறியது. உளவியலில் இது ஒரு நிலை. அவளுடைய நிலையை கம்பன் ஒரே வரியில் சொல்லுகின்றான். “மரண அவஸ்தை” என்கிறான். உயிர் உடலில் இருந்து நீங்கும் காலத்தில் பெறுகின்ற துன்பத்தை அடைந்தாள் என்பது கம்பன் பாடல். கோசலையின் வருத்தத்திற்கு ஒரு அழகான உவமையைக் காட்டுகின்றான்.

இந்த உவமை ஏற்கனவே காட்டிய உவமைதான்.

அது தசரதனுக்குச் சொன்னது. இது கோசலைக்குச் சொன்னது.

ராமனைத் தன்னோடு அனுப்பு என்று சொன்னவுடன் அவன் அடைந்த துயரத்தைச் சொல்வது முதல் உவமை. (கண்ணிலான் பெற்றிழந்தான்). இங்கே கோசலைக்கு சொல்லுகின்ற உவமை வறுமையின் முற்றினார் பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே. ஒரு பொருள் இல்லாமல் இருக்கும் பொழுது துன்பம் இருக்கும். ஒருவருக்கு பார்வை இல்லை. அது துன்பம்தான். ஆனால் அவனுக்கு திடீரென்று பார்வை வந்து கொஞ்ச காலம், எல்லா விஷயங்களையும் பார்த்த பிறகு மறுபடியும் பார்வை போய்விடுகிறது என்று சொன்னால், பார்வை இல்லாமல் இருந்த பொழுது எத்தனை துன்பம் இருந்ததோ அதைப் போல் பல மடங்கு துன்பம் இப்பொழுது இருக்கும்.

வறுமையில் ஒருவன் இருக்கின்ற பொழுது, வறுமை சுமையாகத் தெரியும். துக்கமாகத் தெரியும். பிறகு அவன் நிறைய சம்பாதிக்கிறான். கார் பங்களா என்று வாங்கிவிட்டான். இரண்டு மூன்று வருடம் ஓஹோ என்று வாழ்ந்தான். திடீரென்று ஒரு இக்கட்டு. அடுத்தடுத்து தோல்விகள். பழைய நிலைமைக்கு வந்து விட்டான். முன்பு வறுமையில் இருந்த பொழுது எத்தனை கஷ்டம் இருந்ததோ, அதைவிட இப்பொழுது பல மடங்கு துக்கம் இருக்கும். இது ஏதோ கற்பனையில் சொன்னது கிடையாது.

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பழகும்போது இனிமையாகப் பேசுவார். சின்னதாகத் துணிக்கடை வைத்தார். கடை வளர்ந்தது. ஒரு கடை இரண்டு கடை என்று ஆகியது. ஆனால் வியாபாரத்தில் அகலக்கால் வைத்து, சில தவறான யோசனைகளால், முதலீடு செய்து கடைகளைக் கவனிக்க முடியாமல் அதே நேரத்தில் நண்பர்களால் தகாத பழக்கங்களுக்கு உள்ளாகி ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து பழைய நிலைமைக்கு வந்து விட்டார்.

ஏற்கனவே இருந்த நிலைதான் இது அதிலிருந்துதான் முன்னேறினார். ஆயினும் பழைய நிலைக்கு வந்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர் போலாகிவிட்டார். கொஞ்ச காலத்தில் இறந்தும் விட்டார்.

இது நடைமுறையில் பார்த்த விஷயம்.

இதைத்தான் கம்பன் உவமைகளாகப் பயன்படுத்துகின்றான். ராமனின் பிரிவு, தசரதனுக்குக் கண்ணில்லாதவனுக்கு கண் வந்து, மறுபடியும் பார்வை போனது போன்ற துன்பத்தைத் தந்தது என்று சொன்ன கம்பன், கோசலையின் நிலைக்கு வறுமையில் இருந்த ஒருவன், செல்வம் பெற்று, மறுபடி செல்வத்தை தொலைத்துவிட்டு அடைந்த துன்பத்தைப் போல என்று சொல்வதன் மூலமாக, வாழ்வியல் உண்மைகளை எத்தனை நுட்பமாக நமக்குக் காட்டுகின்றான் கம்பன். சிலருடைய துன்பத்திற்கு ஆறுதல் சொல்லவே முடியாது வார்த்தைகளே

கிடையாது கோசலை அடைந்த துன்பத்திற்கு வார்த்தைகள் இல்லை என்று, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கவிதை பாடுவதில் வல்ல கம்பன் சொல்வதை கவனிக்க வேண்டும்.

‘‘பிற உரைப்பது என்?’’

இவளுக்கு என்ன வார்த்தையைச் சொல்லி ஆறுதல் சொல்ல முடியும் என்று சொல்வதில் உள்ள அந்த இரக்கத்தைக் கவனிக்க வேண்டும். இப்பொழுது ராமன் கோசலைக்கு நிறைய ஆறுதலைச் சொல்லுகின்றான். மகன் சொன்ன ஆறுதலை ஏற்றுக் கொண்ட கோசலை மகனிடம் ஒரு புதிய நிபந்தனையை விதிக்கிறாள். அதைக் கேட்டு ராமன் திகைக்கிறான்.

The post எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றும் கலை appeared first on Dinakaran.

Read Entire Article