உள்ளொழுக்கு!!

1 week ago 6

பெண்களின் ஆழ்மனதில் ஒளிந்திருக்கிற ரகசியத்தை மனதோடு பேசுகிறது. கேரளத்தில் வாழாத ஒருவரால் யோசிக்கமுடியாத ஏன் எழுத முடியாத கதை. கேரள வாழ்விடங்கள் வருடத்திற்கு சில மாதங்களாவது மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகிறது.அந்த பெருமழைக்காலம் மூழ்கடிக்கப்படமுடியாத திரைக்கதைகளால் பதிவு செய்யப்படுகிறது.அந்த புதைகுழியில் சிக்குண்ட பல்வேறு கதாபாத்திரங்களின் மனநிலையை ஓயாமல் பெய்துகொண்டே இருக்கும் மழையைப் போல மிக அற்புதமாக கிறிஸ்டோ டோமி எழுதி இயக்கியுள்ளார்.கேரளா வாழ்நிலையோடு தனித்தீவாக தவிக்கும் மனிதர்களையும் இடுகாடு கிடைக்காமல் தவிக்கும் ஒரு சடலத்தையும் வைத்துக்கொண்டு
கண்ணிமைக்க முடியாத துயர் படம் நெடுக ஒரு பெருமழையை போல பெய்தவண்ணமிருக்கிறது. படம் நெடுக நிலத்தைச் சுற்றி வீட்டைச் சுற்றி, ஏன் வீட்டிற்குள்ளும் ஏன் நம் காலுக்கிடையிலும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது பன்னெடுங்காலமாக உதிர்ந்து கொண்டிருக்கும் பெண்களின் கண்ணீரைப் போல.

இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இந்த ஜாதி மதக் கட்டுப்பாடுகளும், ஆணாதிக்கமும், ஒழுக்கம் என்கிற கற்பிதமும் பெண்களுடைய வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடியவண்ணமிருக்கும் என்ற கோபம் வருகிறது. ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கி தவிக்கும் பார்வதியின் துயரைக் காண்கையில் அந்த பெண்ணை விடுவிக்கும் ஒரு உயிர் கூட இந்த உலகில் இல்லையே என்ற கவலை வருகிறது.கேரளா சினிமா தன் நிலத்தின் பல்வேறு நில அடுக்குகள் காலநிலைகளை பதிவு செய்தது போல இந்திய சினிமாவில் வேறு எந்த மொழி திரைப்படமும் அந்தந்த நிலத்தின் தனித்தன்மைகளை திரையில் அவ்வளவாக பதிவு செய்யவில்லை என்று தோன்றுகிறது.படம் முழுக்க ஊர்வசியும் பார்வதியும் இரட்டை ராஜநாகங்களைப்போல இணைந்தும் பிரிந்தும் உலவுகிறார்கள்.நாகங்களுக்கு எப்போதும் புற்றை விட்டு வெளியேறத் தெரியாதே அது போலத் தானே பெண்களுக்கும் வீட்டை உதறி விட்டு வெளியேறத் தெரியாது.

இருவரும் மழைக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் மாட்டிக்கொண்ட இரண்டாயிர வருட பெண்களின் தவிப்பையும் வலியையும் உணர்ந்து அனாயச நடிப்பால் உயிருள்ள கதாபாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறார்கள். ஊர்வசி அழும்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு உண்மையிலே என் அம்மா அழுவது போலத் தோன்றியது. குழந்தை ஆடும் மரத்தொட்டிலை பரணிலிருந்து இறக்கும் போதும் மீண்டும் பரணேறும் போதும், பார்வதியின் வயிற்றில் தலை வைத்து கொஞ்சும் போதும் என ஊர்வசியின் உடல், விரல், நடை என ஒவ்வொன்றும் நடிப்பதை நம்மால் உணரமுடிகிறது. ஊர்வசியின் அழுகையைப் பார்க்கும்போது அது கிளிசரின் போட்டு அழுகிற அழுகையல்ல. உண்மையிலே மகனைப் பறி கொடுத்த தாயின் இடையறாத அழுகை. ஊர்வசி நம் காலத்தின் மகத்தான நடிகை. இந்த ஆண்டின் தேசிய விருதுக்கு ஊர்வசியை மிஞ்ச யார் வருவார்.?????
– இயக்குநர்
வசந்த பாலன்

The post உள்ளொழுக்கு!! appeared first on Dinakaran.

Read Entire Article