உயர்கல்வி மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி. உதவித்தொகை!

1 week ago 9

ஓ.என்.ஜி.சி., அறக்கட்டளை ஆண்டுதோறும் கல்வியில் சிறந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் உயர்கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகையை வழங்கிவருகிறது. அதன்படி பொறியியல், மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகள் மற்றும் மேலாண்மை, ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ் போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒ.என்.ஜி.சி., மெரிட் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 48 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் என 2 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மொத்த உதவித்தொகை எண்ணிக்கையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்: உயர்கல்வி சேர்க்கை 2024-25ம் கல்வி ஆண்டில் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் 12ம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் அவர்களது இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முழுநேரப் படிப்பாக கல்லூரியில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு ரூ. 4.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஆகஸ்ட் 1, 2024ன் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்க விரும்புவோர் www.ongcfoundation.org/scholarship-scheme எனும் இணையதள முகவரி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை சான்றிதழ், புகைப்படம், ஜாதிச் சான்றிதழ், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி ஐ.டி., அட்டை, பிளஸ் 2 அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவே பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 18ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு https:/ongcscholar.org என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

The post உயர்கல்வி மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி. உதவித்தொகை! appeared first on Dinakaran.

Read Entire Article