உத்தரகாண்ட் நிலச்சரிவு: இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

5 days ago 5

கடலூர்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் கீழே இறங்கி வர முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்தன. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிய 10 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எஞ்சியுள்ள 20 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே ஹெலிகாப்டர் மூலம் 10 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மீட்கப்பட்ட 10 பேரும் தட்சுல்லா என்ற இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மீதமுள்ள 20 பேர் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி அவர்களை தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.

Read Entire Article