உண்மை தெரியாமல் நியாயம் தீர்க்காதே!

17 hours ago 2

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம். சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பது கிடையாது.ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பைத்தொட்டியை கிளறும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.

திடீரென ஒரு நாள் முதலாளி இறந்து விட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், முதலாளியம்மா ‘ஓ’ என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்.

அதற்கு முதலாளியம்ா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும்போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் ‘‘எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது’’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம். முதலாவது எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது. இரண்டாவது நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அடுத்தவரது நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறிய முயல்வது மிக அவசியமானது.‘‘ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்மானிக்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’’ (ரோமர் 2:1, 2).
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.

The post உண்மை தெரியாமல் நியாயம் தீர்க்காதே! appeared first on Dinakaran.

Read Entire Article