உண்ணத் தகாத வண்ண உணவு

3 days ago 5

இன்றைக்கு மாணவர்களிடையே ஒரு புதிய கலாச்சாரம் பரவி வருகிறது. யூ டியூபில் வரும் விதவிதமான சமையல் குறிப்புகளைப் பார்ப்பது, யூடியூபில் பார்த்தது போலவே வீட்டில் சமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இவர்களாகவே சமைத்துச் சாப்பிடுவது.‌.. என்ற இந்த புதுப்பழக்கம் வேகமாகப் பரவிவருகிறது.‌ புதிதாக சமைத்துப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்டால் அவர்கள் புதிதாகச் சமைத்துப் பரிசோதித்துப் பார்ப்பது நம் மண்ணுக்கு ஏற்ற உணவுகள் கிடையாது. அந்த உணவுகள் வெளிநாட்டு மண்ணுக்கு உரியவை.‌ வெளிநாட்டுத் தட்பவெப்பநிலைக்கு உரியவை. உதாரணமாக நூடுல்ஸ் வகைகளைச் சொல்லலாம்.

நாம் உண்ணும் உணவுதான் நம்மைத் தாக்கும் அத்தனை விதமான நோய்களுக்கும் காரணம் என்று இயற்கை மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள். நான் உண்ணும் உணவு சுத்தமாக இருந்தாலே அனைத்து விதமான நோய்களிலிருந்தும் தப்பிவிடலாம்.

வேதிப்பொருட்கள் கலந்த உணவைச் சாப்பிடுவது, பாக்கெட்டுகளில் வரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, நீண்ட நாள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பொருட்களை பயன்படுத்துவது இவை எல்லாம் தவறான உணவு முறைகள் என்று சுட்டிக் காட்டப்படுகின்றன. இவை நாம் அறிந்ததுதான்.‌ மாணவர்களும் இதையேதான் பள்ளியில் படிக்கிறார்கள்.‌ ஆனால், இதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை எந்த அளவுக்கு நாம் மேற்கொண்டு இருக்கிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.‌

இந்தச் சிக்கலை இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்க வேண்டி யிருக்கிறது. மாணவர்கள் பருவம் என்பது கொஞ்சம் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பருவம்.‌ காரசாரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.‌ பெற்றோர்கள் என்ன சமைத்துக் கொடுத்தாலும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. இதனால் தங்கள் வாய்க்கு ருசியாக இல்லை என்று நினைப்பதோடு தாங்களே புதிதாக எதையாவது சமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மாணவர்கள் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், அவர்கள் நமது நாட்டிலேயே கிடைக்கக்கூடிய அரிசி, கோதுமை, பச்சைப் பயறு, உளுந்து காராமணி, நிலக்கடலை போன்ற பொருட்களைக் கொண்டு கொஞ்சம் வித்தியாசமான உணவுகள் செய்து சாப்பிடலாம்.

இன்றைக்குப் பள்ளி மாணவர்கள் ஸ்நாக்ஸ் நேரத்தில் அரிசிக் கொழுக்கட்டையோ, ராகிக் கொழுக்கட்டையோ சாப்பிட்டால் அதை கௌரவ பிரச்னை என்று நினைக்கிறார்கள்.‌ அரிசிக் கொழுக்கட்டையும் ராகிக் கொழுக்கட்டையும் கிராமப்புறத்தான் செய்வது, எங்களைப் பொறுத்தவரை பாஸ்தா, பீட்சா, பர்கர் ஆகியவைதான் முக்கியமானவை என்று நினைக்கிறார்கள். இதைப் பெற்றவர்கள் நுட்பமாகக் கவனித்து சரிசெய்ய வேண்டும்.‌

ஒரு புள்ளி விவரத்தின்படி தினசரி 10 சதவீதம் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு விடுமுறை எடுக்கிறார்கள்.‌ இந்த 10 சதவீதம் மாணவர்களில் பெரும்பாலானவர் மாணவிகள், விடுமுறைக்கு இவர்கள் சொல்லும் காரணம் வயிற்றுவலி, உடல்நிலை சரியில்லை என்பதுதான். இந்த வயிற்று வலிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கும் காரணம் பெரும்பாலும் அவர்கள் உண்ணும் உணவுகளே. பல பள்ளிகளில் அன்றாடம் நடக்கிற இன்னொரு விஷயம் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் மயங்கி விழுவது.‌ நிறைய மாணவர்கள் காலையில் சாப்பிடுவதில்லை. சாப்பிடவில்லை என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் இன்னும் வேடிக்கையானது. சமைக்கத் தாமதம் ஆகிவிட்டது, நான் தாமதமாக எழுந்தேன் என்பதுதான்.

உணவு விஷயத்தில் மாணவிகள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சாப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.‌ காலையில் அதிகபட்சமாக ஒரு இட்லி, அல்லது அரை தோசை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த உணவு, ஒரு நாள் முழுக்க பள்ளியில் கற்றுத் தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவும் உணவாக நிச்சயமாக இருக்க முடியாது. பெற்றோர்கள் அவர்களை விரைவாக எழுப்பி விடுவதும், விரைவாகப் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ தயார் செய்து அனுப்புவதும் முக்கியமானது.‌ அப்போதுதான் அவர்கள் சாப்பிடுவதற்கான நேரம் கிடைக்கும். ‌

காலை உணவைத் தவறவிடுவதால் அன்றையப் பாடங்களில் மாணவர்களுக்குக் கவனம் முழுமையாகச் செல்வதில்லை. மேலும் அந்தப் பசியை தற்காலிகமாகப் போக்குவதற்காகச் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது செரிமான உறுப்புகளைப் பாதிப்படையச் செய்யும் என்பதை பெற்றோர்தான் மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். பழையசோறு

என்பதை இந்தத் தலைமுறை 90% தவற விட்டு விட்டது. இரண்டு கை அளவு பழைய சோறும், நீராகாரமும் உடலுக்கு நல்ல தெம்பு தரும் என்பதை பெற்றோர்கள் தான் தங்களுடைய குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.‌
அதுபோலவே மாணவர்களுக்கு கட்டித் தரும் மதிய உணவில் கீரைகள், காய்கறிகள், தயிர்சாதம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.‌ காலையில் சாப்பிடும் இரண்டு தோசையோ, 3 இட்லியோ மதிய உணவாகத் தருவது மாணவர்களின் உடல்நிலையை வெகுவாகப் பாதிக்கும்.‌

பள்ளிகளில் தொடங்கப்பட்டிருக்கும் காலை உணவுத்திட்டம் மிகவும் வரவேற்கக்கூடிய திட்டம். காலையில் வழங்கப்படும் உணவும் சுவையாக இருப்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளி
களில் தொடக்கப்பள்ளி படிக்கும் மாணவர்கள் காலை உணவு உண்பது உறுதி செய்யப்படுகிறது. இதே திட்டம் உயர் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அப்போது இது ஒரு உன்னத திட்டமாக உருவெடுக்கும். காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கும்.‌ அந்த வகையில் அரசின் இந்தப் பணி மிகவும் வரவேற்கத்தக்கது.

அடுத்த முக்கியமான விஷயம், மாணவர்களின் நொறுக்குத் தீனி, இன்று பத்தில் ஒரு மாணவர் உடல் பருமன் நோயாலும், பத்தில் ஒரு மாணவர் கண்நோய் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உடல் பருமன் நோய்க்குக் காரணமாக அமைகின்றன. உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாததால் கண்நோய் பிரச்னைகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்காக நேரம் கொடுத்து அவர்களுக்குத் தேவைப்படும் நொறுக்குத்தீனிகளை வீட்டிலேயே செய்து தருவது நல்லது‌.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மேல் வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவிகளிடமும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடமும் ஒரு பழக்கம் இருக்கிறது.‌ மதிய உணவைச் சுமப்பது ஃபேஷன் இல்லை, என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் மதிய உணவைத் தவிர்க்கிறார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு படித்து நல்ல வேலைக்குச் சென்று நிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது உங்கள் உணவு முறையால் உடல்நிலை பாதிக்கத் தொடங்கும் என்பதை எச்சரிக்கையாகப் புரிந்துகொண்டு காலை மற்றும் மதிய உணவைத் தவறவிடாமல் இருங்கள்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்துங்கள். நல்ல ஆரோக்கியமான சத்தான உணவை வாங்கிக் கொடுங்கள். பெரும்பாலும் வீட்டில் தயாரித்துக் கொடுக்கப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளின் உடல் நலனுக்கு உகந்த உணவுகளை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள்.

சமூகம் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட, உடலுக்கு ஒவ்வாத புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் மாணவர்களுக்குக் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி அருகே உள்ள உணவகங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். போலியான பொருட்களையோ, போதை தரும் சாக்லேட்டுகளையோ, காலாவதியான பொருட்களையோ கடைகளில் விற்பது நமது தேசத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்பதைக் கடைக்காரர்கள் உணர்ந்து சமூகப் பொறுப்புணர்வுடன் விற்பனை செய்ய வேண்டும்.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

அரசு மாணவர்களின் அடிப்படை தேவைக்காக நிறைய செய்கிறது. அவை வெற்றிகரமாகச் சென்றடைய அதிகாரிகள் தான் பொறுப்பானவர்கள். பள்ளிகளைச் சுற்றித் தரக்கட்டுப்பாடு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

The post உண்ணத் தகாத வண்ண உணவு appeared first on Dinakaran.

Read Entire Article