உ.பி.யில் மீண்டும் ஓநாய் தாக்குதல்; 11 வயது சிறுமி படுகாயம்

1 week ago 7

பஹ்ரைச்,

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹசி துணை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், ஓநாய் கூட்டம் ஒன்று திடீரென இரவில், ஊருக்குள் புகுந்து வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளை, வாயில் கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் தப்பி சென்றது. இதுவரை 9 குழந்தைகள் ஓநாய் கூட்ட தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. பெண் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதனால், மொத்தம் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஓநாய்களின் இருப்பிடங்களை கண்டறிவதற்காக, கேமிராவுடன் கூடிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆபரேசன் பேடியா என்ற பெயரில் ஓநாய்களை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 5 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன. ஒரேயொரு ஓநாய் சிக்காமல் தப்பியுள்ளது. ஓநாய் தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 35 பேர் வரை காயமடைந்து உள்ளனர். ஓநாயை கூண்டு வைத்து பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

ஓநாய்களை கண்டதும் சுட உத்தரபிரதேச அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நேற்றிரவு சுமன் என்ற 11 வயது சிறுமியை ஓநாய் ஒன்று கடித்து, தாக்கியுள்ளது. 6-வது ஓநாயை அரசு நிர்வாகம் தேடி வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுபற்றி சிறுமியின் உறவினரான சுனில் குமார் கூறும்போது, வீட்டில் இருந்த சிறுமியை, ஓநாய் தரதரவென தெருவுக்கு இழுத்து சென்றது. இதனை கவனித்த சிறுமியின் சகோதரர் சுரேந்தர் சத்தம் போட்டான். இதனால் உஷாரான அந்த ஓநாய், சிறுமியை விட்டு, விட்டு தப்பி சென்றது. வன துறையினர் இன்னும் வந்து சேரவில்லை. இதற்கு முன்பே 4 முறை அந்த ஓநாய் கிராமத்திற்கு வந்து சென்றுள்ளது. வீடுகளில் கதவுகள் இல்லை. கதவுகள் இருந்திருப்பின், இந்த சம்பவம் நடந்திருக்காது என்று அவர் கூறினார்.

Read Entire Article