‘‘இன்றும் வாழும் வள்ளல் பெருமான்’’

3 months ago 12

தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் பல சான்றோர்கள் வாழ்ந்தனர். இக்காலத்தை தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக் காலம் என்றே சொல்வார்கள்.19-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் சான்றோர்கள் எல்லாரிலும் தெய்வத் தன்மை பொருந்திய பெரியாராக, சித்த புருஷராக, மரணமில்லாப் பெருவாழ்வுடன் வாழ்ந்தவர் வடலூர் வள்ளலார் ஒருவர்தான்.திருவருட்பிரகாச வள்ளலார் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி சிதம்பரத்தை அடுத்த மருதூர் என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் இராமையா பிள்ளை. முதல் ஐந்து மனைவிகளை முறையாக மணந்து இழந்தார். ஆறாவது மனைவியாக வாய்த்தவர் சின்னம்மை. இவர் பிறந்த ஊர்
சென்னைக்கு அடுத்துள்ள சின்னக்காவனம்.

இராமையா – சின்னம்மை தம்பதிகளுக்கு இராமலிங்கம் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தார். சபாபதி, பரசுராமர் என்போர் இராமலிங்கத்தின் மூத்த சகோதரர்கள். சுந்தரம்மாள், உண்ணாமலை அம்மாள் இருவரும் மூத்த சகோதரிகள். ஆறாவது பிள்ளையான இராமலிங்கத்தை அனைவரும் அன்புடன் வளர்த்தனர். இராமலிங்கத்தின் குழந்தைப் பருவத்திலேயே தந்தையார் இராமையாப் பிள்ளை மறைந்தார்.

சின்னம்மை மருதூரை விட்டு நீங்கி சின்னக்காவனத்தை அடைந்து சில காலம் வாழ்ந்தார். 1924-ம் ஆண்டு சென்னையில் தம் மக்களுடன் நிரந்தமாகக் குடியேறினார்.இராமலிங்கத்தின் மூத்த சகோதரர் சபாபதி பிள்ளை. அப்போது அவர் சென்னையில் புகழுடன் விளங்கிய பெரும் புலவர். காஞ்சி சபாபதி முதலியாரிடம் தமிழ்க் கல்வி பயின்று புராண பிரசங்கத்தில் வல்லவரானார்.

சபாபதி பிள்ளை தம் தம்பி இராமலிங்கத்தையும் சிறந்த தமிழ்ப் புலவராக்க எண்ணினார். தாமே அவருக்குச் சிறந்த தமிழ் நூல்களைப் போதித்து வந்தார்.இராமலிங்கம் தமது ஏழாவது வயதிலேயே அறிவில் சிறந்து விளங்கினார். இறைவனிடம் அன்பு செலுத்தத் தொடங்கினார். நல்லொழுக்கச் சீலராக விளங்கிய இராமலிங்கம் தமது ஒன்பதாவது வயதிலேயே கவிபாடத் தொடங்கி விட்டார்.

இவர் நாள்தோறும் திருஒற்றியூருக்குப் போவார். ஒற்றியூர் இறைவனை உள்ளத்தில் வைத்து கசிந்துருகி கவிகள் பாடுவார்.இறைவனை வணங்குவது, இன்சுவைக் கவிகள் புனைவது, தமிழ் கற்க விரும்புவோர்க்கு தமிழ் கற்பிப்பது. ஐயமுற்றுக் கேள்விகள் கேட்போருக்கு விளக்கம் சொல்வது, போன்ற செயல்களிலேயே அவர் எப்போதும் ஈடுபட்டார். தினமும் சென்னை கந்தக் கோட்டத்திற்குச் செல்வார். கந்தக் கோட்டத்து முருகன் மீது மனம் உருகிப் பாடுவார். இவ்வாறு அன்பு நெறியிலேயே கவனம் செலுத்தி வந்தார். அவருக்கு பணம், காசு, சொத்து, சுகம், குடும்ப வாழ்வு எதிலும் சிறிதும் பற்று இருக்கவில்லை.

இந்த நிலையில் அண்ணனும் அன்னையும் இவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அக்காள் பெண்ணையே திருமணம் செய்து வைத்தனர். பெயருக்குத்தான் திருமணம். மண வாழ்க்கையில் இவர் ஈடுபடவில்லை. விரைவிலேயே இல்லம் விட்டு நீங்கி தனியாகச் சிதம்பரத்திற்குச் சென்று வாழ்ந்தார். அங்கு ஏராளமான பாடல்கள் புனைந்தார். சுவாமிகளின் பாடல்கள் ‘திருவருட்பா’ என்னும் பெயரில் வெளிவரத் தொடங்கின.

இராமலிங்க சுவாமிகள் 1858-ம் ஆண்டு வடலூர் வந்தார். வடலூரை அடுத்த கருங்குழியில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து!அப்போது வடலூருக்கு பார்வதிபுரம் என்று பெயர். அங்கு இருந்து பார்த்தால் சிதம்பரம் கோயிலின் நான்கு கோபுரங்களும் தெரியும். தில்லைக்கு வடக்கே இவ்வூர் அமைந்திருப்பதால் வடலூர் என்று பெயர் சூட்டினார். வடலூர் என்றால் குற்றம் இல்லாத ஊர் என்று பொருள்.

அத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலைப் புதுப்பித்து அதை முன் போலவே எல்லா மதத்தினரும் வணங்கும் பொதுக் கோயில் ஆக்கும் திருப்பணியில் ஈடுபட்டார். அது நிறைவேறவில்லை. அதனால் இறைவனான அருட்பெருஞ்ஜோதிக்கு வடலூரில் ஞான சபை ஒன்றைப் புதிதாக அமைத்தார்.வடலூரில் 1865-ஆம் ஆண்டு சமரச மார்க்க சங்கத்தை நிறுவினார். 1867-ல் சத்திய தருமச் சாலையை அமைத்தார். தருமச் சாலையில் நாளுக்கு நாள் கூட்டம் பெருகவே பக்கத்தில் மேட்டுக்குப்பம் கிராமத்தில் போய் சித்திவளாகத் திருமாளிகையில் 1870-ம் ஆண்டு முதல் தங்கியிருந்தார். இந்தச் சமயத்தில் மக்கள் வள்ளலாரை தெய்வமாகவே எண்ணத் தொடங்கி விட்டார்கள்.

1871-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் நாள் தை மாதம் 13-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று தைப்பூசம் நன்னாளில் வடலூரில் தாம் கட்டிய சத்திய ஞான சபையில் முதன் முறையாக அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் காட்டுவித்தார். இதுவே தைப்பூசம் பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.1873-ஆம் ஆண்டு தம் சன்மார்க்கக் கொள்கைக்காக மஞ்சளும், வெள்ளையும் கொண்ட சன் மார்க்கக் கொடியை ஏற்றி பேருபதேசம் செய்தார்.

1874-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு சித்திவளாகத் திருமாலை கையில் இருந்த தமது அறைக்குள் புகுந்து கதவைத் திருக்காப்பிட்டுக் கொண்டார்.
வள்ளலார் பெருமான் மக்கள் முன்னால் நடமாடி வாழ்ந்த காலம் 51-ஆண்டுகள்தான். இந்த ஆண்டுக்குள் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.வள்ளலார் பெருமான் ‘‘அருட்பெருஞ்ஜோதி, ‘அருட்பெருஞ்ஜோதி,’ தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! என்னும் மகா மந்திரத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறார்.

‘‘சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருப்பதே’’ ‘‘சாகாதவனே சன்மார்க்கி’’ என்பது வள்ளலார் உபதேசம். ‘‘என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன் மார்க்கம்’’ என்பது வள்ளலார் வாக்கு.
மக்கள் வாழப் பிறந்தவர்கள். இன்பத்திலே இணைந்து நின்று மகிழப் பிறந்தவர்கள். எல்லா இன்பங்களையும் எல்லா நலன்களையும் அடைய எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. இதற்கு அடிப்படையாக வேண்டுவது ‘‘ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை’’ என்கிறார் வள்ளலார்.

தம்முடைய சுத்தசன்மார்க்கத்தின் ‘‘லட்சியமே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை தான்!” என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார். ‘‘உயிர்கள் எல்லாம் ஒரே இனம். உயிர்கள் எல்லாவற்றிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.’’ என்பது தான் ஜீவ காருண்யம்’’ என்கிறார். வள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை, பேதங்களைக் கடந்த அல்லது பேதங்கள் அற்ற அபேதசித்தாந்தமாகும்.

கடவுள் வேறுபாடு, வருண வேறுபாடு, சமய மதவேறுபாடு, சாதி வேறுபாடு, ஆகிய எல்லாவற்றையும் கடந்து, இன, மொழி, நாடு, நிற வேறுபாடுகளையும் கடந்து வளர்வது ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை.தெய்வங்கள் பலப்பல என்று சொல்லும் மூட நம்பிக்கைக்கு எதிரான சித்தாந்தம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.‘‘ஒன்றே சிவம் என்று உணர்ந்து இவ்வுலகம் எலாம், நன்றே ஒருமையுற்று வாழி’’ என்றும் பாடுகிறார் வள்ளலார். வள்ளலார் ‘‘சிவம்’’ என்று சொல்வது உயிர்குலம் அனைத்துக்கும் பொதுவான ‘அருட்பெருஞ்ஜோதியையே ஆகும்.

வள்ளலார் சொல்லும் இறைவன் நம்முடைய சமய பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். இறைவனுக்கு வள்ளலார் கூறும் விளக்கம் இதுதான் ‘‘உண்மையில் கடவுள் எனப்படுவது அருள் மயமான அன்பாகும் அது உலகில் உள்ள எல்லாவற்றிலும் பரிபூரணமான சமரசத்தையும், சமநிலையையும் ஏற்படுத்தி அவைகளை நிலை நிறுத்தி வைக்கிறது. அகிலமாம் அன்பாம் கடவுள்’ என்று சொல்லி உலக ஒருமைப் பாட்டு உரிமைக்கு வழி வகுத்திருக்கிறார் திருஅருட்பிரகாச வள்ளலார்.

ஒரே உலகம் என்று உணர்வுடன் தோன்றிய மதங்கள் தங்களுக்குள்ளாகவே போராடிக் கொண்டு, தம்தம் உயிர்க் கொள்கையான ‘உலக ஒருமைப்பாட்டையே’ கொன்று விட்டன.இதனால்தான் சமய மதங்களை ஒதுக்கிவிட்டு ‘ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை’க்கு வழிவகுக்கிறார் வள்ளலார். இதற்கு ஜீவகாருண்யத்திற்கு எல்லா மதமும் சம்பதம் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் அதனால் தான் ‘‘எம்மதமும் சம்பிதமே’’ என்கிறார்.

‘எம்மத நிலையும் நின் அருள் நிலையில்
இலங்குதல் அறிந்தனன்
எல்லாம் சம்மதமாக்கிக் கொள்கின்றேன்.’’
எம்மதம் என்று வள்ளலார் எதைச் சொல்கிறார்? மத நிறுவனங்களை அல்ல, மததத்துவங்களை.

திருஅருட்பிரகாச வள்ளலார் எல்லா மதங்களையும் சம்மதமாக்கிக் கொள்கிறார் என்பதை விளக்கு ‘திருஅருட்பா’ பாடலைப் பாருங்கள்,

‘பெருகிய பேர் அருளுடையார்
அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகை என்கணவர்
திருப்பேர்புகல் என்கிறாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன்
அயன் என்பேன் நாரா
யணன் என்பேன் அரன் என்பேன்
ஆதிசிவன் என்பேன்

பருகு சதா சிவம் என்பேன்
சத்தி சிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன்
பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்தப் பிரம்மம் என்பேன்
துரிய நிறை என்பேன்
சுத்த சிவம் என்பேன்

இவை சித்து விளையாட்டே’’
‘சிற்சபையில் நடிக்கின்ற
நாயகனார் தமக்குச்
சேர்ந்த புறச்சமயப் பேர்
பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத்தாற் பெயரும்

அவர் பெயரே கண்டாய்
பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு
எப்பெயர் ஒவ்வாதோ
அச்சமயத்தேவர் மட்டோ
‘நின்பெயரும் என்பெயரும்
அவர் பெயரே’ எவ்வுயிரின்
பெயரும் அவர் பெயரே
சிற்சபையில் என் கணவர்

செய்யும் ஒரு ஞானத்
திருக் கூத்துக் கண்டளவே
தெளியும் இது தோழி’’

வள்ளலார் இந்தப் பாடல்களில் எல்லா சமயங்களின் தெய்வப் பெயர்களை எல்லாம் சொல்லுகிறார். இவை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனின் பல அம்சங்கள் தான் என்பதை நமக்கு உணர்த்துகிறார். எல்லா உயிர்களிலும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை ‘நின் பெயரும் என் பெயரும் அவர் பெயரே!’ என்ற சொற்றொடரால் அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறார். இதன் மூலம் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையை மேலும் மேலும் உயர்த்திக் காட்டுகிறார்.

‘‘ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை’’ என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சித்தாந்தம். ‘‘தெய்வம் ஒன்று’’ என்பது வள்ளலார் கண்ட அனுபவ உண்மை. அந்த ஒரே தெய்வத்தின் பெயர் தான் ‘அருட்பெருஞ்ஜோதி!’ அந்த தெய்வம் எல்லா உயிரிலும் இருக்கிறது என்று விளக்குகிறார்.

உயிர்கள் அனைத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்ற இயற்கை உண்மையை உணராதவர், தம்மிடத்தில் உள்ள கடவுள் தன்மையை உணரத்திரனற்றவர் ஆகிறார்.ஆகவே, ‘சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருத்தலே சாகாதவனே சன்மார்க்கி’ என்பது வள்ளலார் உபதேசம். ‘என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன் மார்க்கம்’ என்பது வள்ளலார் வாக்கு.வள்ளலார் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்று மூவகை தேக சிந்திகளையும் பெற்றவர். இன்றும் வள்ளல் பெருமான் நித்ய தேகத்துடன் வாழ்ந்து வருகிறார் என்பது சன்மார்க்கிகளின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்து வருகிறது!

டி.எம்.ரத்தினவேல்

The post ‘‘இன்றும் வாழும் வள்ளல் பெருமான்’’ appeared first on Dinakaran.

Read Entire Article