
மும்பை,
இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. ஆனால் சண்டை நிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' கட்டுரையில், "சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் அகன்ற பாரதம் தொடர்பாக கனவு கண்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரை, சிந்து முதல் அசாம் வரை இந்தியா இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் செய்து அந்த கனவு நிறைவேறவிடாமல் மோடி அரசு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி விட்டது. சாவர்க்கர் பெயரை கூறி இனிமேல் அரசியல் செய்ய மோடிக்கு உரிமையில்லை.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அகன்ற பாரதத்துக்கு ஆதரவாக பேசினர். ஆனால் வாய்ப்பு கிடைத்தபோது நழுவ விட்டு விட்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் சண்டை இன்னும் 4 நாட்களாவது நீடித்து இருக்க வேண்டும். அப்படி நடந்து இருந்தால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கராச்சி, லாகூரை கைப்பற்றி இருக்கும்.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதை கெடுத்துவிட்டார். சண்டையை நிறுத்தும் முன் இந்தியா குறைந்தபட்சம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையாவது கைப்பற்றி, பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து 'சாம்னா' பத்திரிகை நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், ''பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது வெற்றி பெற்ற நாட்டின் தலைவர் போல பேசவில்லை. மோடி, அமித்ஷாவால் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை தான் உடைக்க முடியும். பாகிஸ்தானை உடைக்க முடியவில்லை" என்று சாடினார்.