இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அக்.20ல் 20 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்: வீரபாண்டி கோயிலில் நடக்கிறது

4 hours ago 4

தேனி, செப். 27: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயில்களில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானத்திற்குள் உள்ள குடும்பங்களை சேர்ந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதன்படி, தேனி அருகே வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கவுமாரியம்மன்கோயிலில் வருகிற அக்டோபர் 20ம் தேதி 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. திருமணத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு வரை ரூ.50 ஆயிரம் வரை ஒரூ திருமண ஜோடிக்கு திருமண செலவு செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலையேற்றத்தின் காரணமாக ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியுள்ளது.

இதன்படி, திருமணம் செய்து கொள்ள உள்ள தலா ஒவ்வொரு மணமக்களுக்கும் மணமகனுக்கான ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 4 கிராம் தங்கத்தாலி, உடைகள், மணமகளுக்கான உடைகள், பூமாலை, புஷ்பம், சீர்வரிசை பண்டபாத்திரங்கள், கட்டில், பீரோ, பாய், தலையணை ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நடத்தி வைக்க உள்ள திருமணத்தில் பங்கேற்க விரும்பும் மணமக்கள் தங்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருப்பதற்கான வருவாய்சான்று, இதற்கு முன்னர் திருமணம் ஆகவில்லை என்பதற்கான வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சான்று, குடும்ப அட்டைநகல், ஆதார் அட்டை நகல், மாற்றுச்சான்று நகல்களுடன் வீரபாண்டி கோயில் நிர்வாக அலுவலகத்தில் வருகிற அக்டோபர் 15ம் தேதிக்குள் சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல்அலுவலர் மாரிமுத்து தெரிவித்தார்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அக்.20ல் 20 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்: வீரபாண்டி கோயிலில் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article