இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பி தருகிறது அமெரிக்கா: பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் தகவல்

2 hours ago 3

வில்மிங்டன்: இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை அமெரிக்கா திருப்பி தருவதாக தன்னை சந்தித்த பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2017ம் ஆண்டு குவாட் அமைப்பை உருவாக்கின. அனைவரையும் உள்ளடக்கிய, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நிலைநிறுத்துவதை குவாட் அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், இது தங்களின் எழுச்சியை கட்டுப்படுத்தவே அமைக்கப்பட்டிருப்பதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், குவாட் அமைப்பின் 4வது உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் நேற்று நடந்தது. இதற்காக 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், தென் கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் மற்றும் தெற்காசியாவில் உள்ள கூட்டாளர்களுடன் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்தும், குவாட் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பின் எதிர்கால திட்டம், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர, உக்ரைன், காசா போர்கள் உள்ளிட்ட உலகளாவிய விஷயங்களிலும் 4 நாடுகளின் தலைவர்கள் கருத்தை பரிமாறிக் கொண்டனர்.

ரஷ்யாவின் ராணுவ உதவி வடகொரியாவை எந்தளவுக்கு உற்சாகப்படுத்துகிறது என்பது குறித்தும் மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக பதிலளித்தார். அவர் பேசுகையில், ‘‘குவாட் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் சட்டப்பூர்வமான சர்வதேச உத்தரவுகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கிறோம். அனைத்து விஷயங்களுக்கும் அமைதியான தீர்வு காண வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்.

அந்த வகையில் எங்களின் செய்தி தெளிவாக உள்ளது, குவாட் அமைப்பு கூட்டாகவும், உதவுவதற்கும், இணக்கமாகவும் நீடித்திருக்கும். சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய, செழிப்பான இந்தோ பசிபிக் பிராந்தியமே எங்களின் முன்னுரிமை. சுகாதார பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாங்கள் ஒன்றாக பல சிறப்பான, அனைவரையும் உள்ளடக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். உலகமே பதற்றமான சூழலில், போர்களால் சூழப்பட்டிருக்கும் நேரத்தில் குவாட் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளோம்.

இத்தகைய நேரத்தில், குவாட் அதன் ஜனநாயக மதிப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது முழு மனித இனத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது’’ என்றார். மேலும், பிராந்தியத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான குவாட் அமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவாக ‘குவாட் லீடர்ஸ் கேன்சர் மூன்ஷாட்’ திட்டத்தில் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 4 கோடி தடுப்பூசிகள் வழங்க, இந்தியாவின் பங்களிப்பாக 7.5 மில்லியன் டாலர் வழங்குவதாக மோடி அறிவித்தார்.

பின்னர், 4 தலைவர்களுடன் வெளியிட்ட கூட்டறிக்கையில், உக்ரைனில் ஓயாத போர் மற்றும் காசாவில் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த குவாட் தலைவர்கள், சர்வதேச சட்டத்தை கடைபிடிக்கவும், ஐநா சாசனத்திற்கு மதிப்பளித்து மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணவும் வலியுறுத்தினர்.

அடுத்த ஆண்டு குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருப்பது குறித்து பிரமதர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி நியூயார்க் நகருக்கு சென்றார். அங்கு, இந்திய வம்சாவளிகள் மத்தியில் உரையாற்றும் மோடி, பல்வேறு தொழில் நிறுவன சிஇஓக்களை சந்திக்கிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைப்பதாக பைடன், மோடியிடம் தெரிவித்தார். இந்த புராதன கலை பொருட்கள். 4000 ஆண்டுகள் பழமையானவை.

கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலகட்டத்தில் இந்தியவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* மோடியை பாராட்டிய பைடன்
குவாட் மாநாட்டிற்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இப்பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் பைடனும், மோடியும் பேசினர். பைடனுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மோடி குறிப்பிட்டார்.

அதே போல சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டதற்காக மோடிக்கு பைடன் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எம்கியூ-9பி டிரோன்களை வாங்க இருப்பதையும், அமெரிக்காவுடன் இணைந்து கொல்கத்தாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க இருப்பதையும் பைடன் வரவேற்றார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு தரும் என்றும் பைடன் உறுதி அளித்தார். இதே போல, ஜப்பான், ஆஸ்திரேலியா பிரதமர்களுடனும் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

* வெள்ளி ரயில் பரிசு
அதிபர் பைடனுடனான சந்திப்பின் போது, மகாராஷ்டிர கைவினைக் கலைஞர்கள் வெள்ளியைக் கொண்டு உருவாக்கிய, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் மாதிரியை, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மேலும், பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பாரம்பரியமான காஷ்மீர் சால்வையை பரிசாக வழங்கினார்.

The post இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பி தருகிறது அமெரிக்கா: பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article