
சென்னை,
2011-ம் ஆண்டு புதிதாக உதயமான ஈரோடு கிழக்கு தொகுதி, அம்மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மிகவும் சிறியது. என்றாலும், ஈரோடு மாநகராட்சி பகுதி இந்தத் தொகுதிக்குள் வருவதால் முக்கியத்துவம் பெறுகிறது. 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் சட்டசபை தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி, அதன்பிறகு குறுகிய காலத்தில் 2 இடைத்தேர்தல்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மரணம் அடைந்ததால், முதல் இடைத்தேர்தல் வந்தது. அதில், போட்டியிட்ட அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரும் மரணம் அடைந்ததால், மீண்டும் இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 5-ந் தேதி சந்தித்தது. இந்த முறை வேட்பாளரை களம் இறக்க காங்கிரஸ் முன்வராததால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.வே வேட்பாளரை போட்டியிடச் செய்தது.
அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த காலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் சராசரியாக 64 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். எனவே, அந்த வாக்குகள் என்னவாகும்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான், கடந்த 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில், 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்து இருந்தனர். இது 68.06 சதவீதம் ஆகும். கடந்த 8-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பதிவான வாக்குகளில் இவர் பெற்றது 74.70 சதவீதம் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24 ஆயிரத்து 151 வாக்குகளை பெற்றபோதும் டெபாசிட் இழந்தார். நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் எதிர்ப்பை பதிவு செய்வது) 6 ஆயிரத்து 109 வாக்குகளும் கிடைத்தது.
அப்படி என்றால், அ.தி.மு.க.வின் 64 ஆயிரம் வாக்குகள் என்ன ஆனது? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழலாம். ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, அ.தி.மு.க.வினரின் வாக்குகள் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலைவிட இந்த இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் 6.73 சதவீதம் குறைந்துள்ளது. இது வாக்களிக்காத அ.தி.மு.க.வினரின் வாக்கு சதவீதம் என்று எடுத்துக்கொண்டாலும், கடந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றதைவிட தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சுமார் 5,500 வாக்குகளும், முந்தைய வேட்பாளர் மேனகாவைவிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி13 ஆயிரம் வாக்குகளும் அதிகம் பெற்றுள்ளனர். எனவே, அ.தி.மு.க.வினரின் வாக்குகள் தான் இவ்வாறு பிரிந்து போய் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த 2 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பாத அ.தி.மு.க.வினர் நோட்டாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.