புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை முன்னிறுத்தி பாஜக தலைமை ‘திரங்கா யாத்ரா’ பிரசார அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் செய்துள்ளன. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை முன்னிலைப்படுத்தி, இன்று (மே 13) முதல் 11 நாட்களுக்கு நாடு தழுவிய ‘திரங்கா யாத்ரா’ பிரசாரத்தை பாஜக தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பானது, எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் வெளியிட்ட பதிவில், ‘இந்திய ராணுவத்திற்கு நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் எதிர்க்கட்சிகள், இந்த விசயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை.
ஆனால் பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரமானது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது’ என விமர்சித்துள்ளார். முன்னதாக கடந்த 10ம் தேதி பாஜக வெளியிட்ட சமூக ஊடக பதிவில், காங்கிரஸ் தலைமையிலான முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விமர்சித்ததற்கு, ‘இது அரசியல் செய்யும் நேரமல்ல’ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு ஆதரவு அளித்தாலும், பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரம் தேவையற்ற அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில், ஆபரேஷன் சிந்தூர் பிரசாரம் குறித்து கலவையான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிலர், பாஜகவின் இந்த முயற்சியை தேசபக்தியை தூண்டுவதாக வரவேற்றாலும், மற்றவர்கள் இதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படும் உத்தியாக விமர்சித்தனர். அவர்களில் ஒரு பதிவர், ‘பாஜக ஆட்சி, அதிகாரத்தில் நீடிப்பதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும்’ என்று குற்றம்சாட்டினார். மேலும் இது பொதுமக்களிடையே ஒன்றிய அரசு மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவர், ‘பாஜகவின் இந்த பிரசாரம் ஆர்எஸ்எஸ் அழுத்தத்தின் விளைவாகவும், மோடியின் பதவி நீடிப்பு நோக்கத்துடனும் உள்ளது’ என்று விமர்சித்தார். இத்தகைய விமர்சனங்கள், பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு பதிலாக, அரசியல் ரீதியான பிளவுகளை தீவிரப்படுத்தலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை முன்னிறுத்தி பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரத்துக்கு எதிர்ப்பு: காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.