ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார நடவடிக்கை

1 week ago 11

*விவசாயிகள் வலியுறுத்தல்

ரெட்டிச்சாவடி : கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை ஊராட்சியில் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக 40க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கடை ஏரி கடந்த 15 ஆண்டுகள் மேலாக ஆக்கிரமிப்பில் உள்ளது. ஏரியை முழுவதும் சிலர் ஆக்கிரமித்து பயிரிட்டு வருகின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், புதுக்கடை ஏரி ஆக்கிரமிப்பில் உள்ளதால் பல ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி வீணாகி வருகிறது.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஏரியின் பெரும்பகுதியை இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, நிலமாக மாற்றியமைத்து மின் மோட்டார் மூலம் பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக நீர்வரத்துப் பாதைகளை இவர்கள் ஆக்கிரமித்துள்ளதால், எவ்வளவு மழை பெய்தாலும் இந்த ஏரி எப்போதும் வற்றிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

நீர்நிலை ஆதார அமைப்புகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும், செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பாக ஏரியை ஆக்கிரமித்து பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிக்கரை சாலை சேதம்

புதுக்கடையில் இருந்து ஏரிக்கரைக்கு செல்லும் வயல்வெளி தார் சாலை சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான உரங்களையும், அங்கு விளைந்த வேளாண் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

சாலை போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையொட்டி நானல், கருவேல மரங்கள் மண்டிக்கிடப்பதால், சாலை குறுகி ஒத்தையடி பாதையாக உள்ளது.இதனால், நிலங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகள், சாலையை அரசு சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article