அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 week ago 6

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சி.பி.ஐ பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சி.பி.ஐ. வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்ததோடு, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மீண்டும் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலை கைது செய்ததில் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read Entire Article