அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல்: 9-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை

3 hours ago 1

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ், பெயிண்டர். இவரது மனைவி வனிதா, கூலித்தொழிலாளி. இவர்களது மகன் கவின்ராஜ் (வயது 14). இவன் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவன் கவின்ராஜ், காலை 11.15 மணி அளவில் வகுப்பு இடைவேளையின் போது கழிவறைக்கு சென்று உள்ளான். பின்னர் அவன் அங்கே மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆசிரியர்கள் கவின்ராஜை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கவின்ராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கவின்ராஜின் உறவினர்கள் ஏராளமானோர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே திரண்டனர். பின்னர் கவின்ராஜின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள், போலீசார் அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மாணவன் கவின்ராஜிற்கும், வேறொரு மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளியின் கழிவறையில் மீண்டும் கவின்ராஜிற்கும், அந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவன் சரமாரியாக தாக்கியதில் கவின்ராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்ராஜை தாக்கியதாக கூறப்படும் மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article