அரசு செயலர்களை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விவகாரம் திவிக, பெரியார் திக நிர்வாகிகளை ஜாமீனில் அனுப்ப நிபந்தனை

1 week ago 8

* துணை ஆட்சியர் கோர்ட்டில் அதிரடி

* சமூக அமைப்புகள் குவிந்ததால் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அரசு செயலர்களின் வீடுகளில் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். பிறகு அரசு அதிகாரிகள் முதல்வரை சந்தித்து திராவிடர் விடுதலை கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த லோகு. அய்யப்பன், ரவிச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த இளங்கோ உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் திகவினர் செயலர்களின் கார்களை வழிமறித்து முற்றுகை போராட்டம் நடத்துவதாக போஸ்டர்கள் அடித்து ஒட்டினர்.

இதுசம்பந்தமாக பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சம்பந்தமாக லோகு.அய்யப்பன், இளங்கோ, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நேற்று காலை சாரம் பகுதியில் உள்ள துணை ஆட்சியர் (வடக்கு) அலுவலகத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜராகினர். இதனை துணை ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி அவர்களை ஜாமீனில் அனுப்ப ரூ.1 லட்சம் மதிப்பிலான பிணை பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு ஆண்டுக்கு எந்தவித போராட்டம் நடத்துவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டார். இதற்கு திராவிடர் கழகத்தினர் அப்படி இருக்க முடியாது, சிறையில் அடைத்தாலும் நாங்கள் பொதுமக்களுக்காக போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்த திராவிடர் கழகத்தினருக்கு உறுதுணையாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்வத்தை தொடர்ந்து அவர்கள் மீது கைது நடவடிக்கை தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post அரசு செயலர்களை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விவகாரம் திவிக, பெரியார் திக நிர்வாகிகளை ஜாமீனில் அனுப்ப நிபந்தனை appeared first on Dinakaran.

Read Entire Article