
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த கவர்னர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றார். அங்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை சென்றார்.
அய்யா வைகுண்டர் அவதார பதியில் தரிசிக்க வந்த கவர்னர், உடை மாற்றும் அறையில் இருந்தபோது, ஜெனரேட்டர் அறையில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. தொடர்ந்து அங்கு கரும்புகை சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஜெனரேட்டரில் இருந்து கரும்புகை வெளிவந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.