குளித்தலை, மே 12: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் 3நாள் வீதியுலா முடிந்து நேற்று இரவு 8 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான ரெத்தினகிரீஸ்வரர் கோவில். இக்கோயில் 1017 படி உயரம் கொண்டதாகும். மலைக்கோயிலில் சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இவ்வாண்டு சித்திரை தேர்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான எட்டாம் நாள் இரவு குதிரை தேர், 9ம் நாள் காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த குடிப்பாட்டுக்காரர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்தேர் மலையைச் சுற்றி கிரிவலம் பாதையில் வலம் வந்து மூன்றாவது நாளான நேற்று இரவு 8 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் ஆங்காங்கே அன்னதானங்கள் நடைபெற்றது.
தமிழ்நாட்டிலே மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோவில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது . இவ்விழாவில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளை குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுத்தப்பட்டுள்ளனர்.
The post அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் 3 நாள் தேரோட்டம் முடிந்து தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது appeared first on Dinakaran.