அமைதியான உறக்கமே ஆரோக்கியம்!

2 hours ago 5

உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரியனை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உறங்க ஆரம்பித்து, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து அன்றாடப் பணிகளை கவனிப்பதையே நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இயற்கையோடு இணைந்திருந்த அந்த வாழ்க்கை முறை ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தது.இரவையும் பகலாக்குகின்ற செயற்கை ஒளி நிறைந்த தற்கால வாழ்க்கைச்சூழலில் உடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றத்தால் பலரும் சந்திக்கும் பிரச்னையாக உறக்கமின்மை உருவெடுத்திருக்கிறது.அமைதியான உறக்கத்தைப் பெற வேண்டுமானால் அதற்கு ஏற்றவாறு நமது மூளையைப் பழக்க வேண்டும் என்று மனோதத்துவம் மற்றும் உறக்கவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின் தொகுப்பு இதோ!

ஆழ்நிலைக்கு தகுந்தவாறு தூக்கத்தை வரவழைப்பதற்கு படிப்படியாக நாம் தான் பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது மூளை அதை ஏற்றுக்கொண்டு படுத்த சிறிது நேரத்தில் உறக்கம் வரும்.இரவு நேரத்தில் தூங்குவதற்கான ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, உறங்கும் நேரம் வந்து விட்டது என்ற குறிப்பை மூளை உடலுக்கு தெரிவிக்கும். எனவே நாம் தூங்கும் நேரமும், விழித்தெழும் நேரமும் மாற்றங்களுக்கு உட்படாமல் இருப்பது முக்கியம். இல்லாவிட்டால், வழக்கமான உறக்க நேரத்தை உடல்கவனிக்க முடியாமல் தடுமாறும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதே மூளையின் ஆரோக்கியத்துக்கு நல்லது.படுக்கையில் படுத்த பிறகு தூங்காமல் விழித்திருக்கக்கூடாது. இரவில் தூக்கம் வராவிட்டால் எழுந்து வேறொரு இடத்தில் ஓய்வாக அமரலாம். அல்லது புத்தகங்கள் படிக்கலாம். படுக்கையிலேயே புரண்டு தூங்காமல் இருந்தால் மூளை அதற்கேற்ப பழகிவிடும். இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அமைதியாக உறங்க வேண்டிய இடமான படுக்கையில் சிரமப்பட்டு தூங்கி சோர்வுடன் எழுந்திருக்கும் இடமாக மாறக்கூடும்.

ஏழு முதல் எட்டு மணி நேரத்தூக்கம் அவசியம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. ஒருவர் காலை 7 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமானால், எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது இரவு 11 மணிக்கு தூங்கச் செல்வது அவசியம். இல்லாவிட்டால் நாளடைவில் மன அழுத்தம் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கக் கூடும். வைட்டமின் டி மற்றும் இ ஆகிய ஊட்டச் சத்துக்கள் தூங்குவதற்கான நல்ல மனநிலையை உருவாக்குவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் வைட்டமின் டி மற்றும் இ குறைபாடு உள்ளவர்கள் தூக்கமின்மை (ஸ்லீப் அப்னியா – Sleep Apnea) பிரச்னையால் அவதிபடுவதாக கண்டறிந்துள்ளனர். ஒரு நாளுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்கினால் எலும்புகளில் உள்ள கனிமச் சத்து அளவு குறைந்து கைகால், மூட்டுகளில் வலி ஏற்படக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.உறக்கத்தின் மூலம் மூளைஉட்பட உடலின் அனைத்து உறுப்புகளும் ஓய்வு பெறுகின்றன. விழிப்பு நிலையில் இருப்பதைவிட தூங்கும்போது சுவாசம் சீராகவும், மெதுவாகவும் செயல்படுகிறது. இதனால் மூளையின் சக்தி மையங்கள் துடிப்பாக இயங்குகின்றன. என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நேரத்திற்கு உணவு உட்கொண்டு, அதிகாலையில் சிறிது நடை அல்லது உடற்பயிற்சிகள் செய்ய நல்ல தூக்கம் வசப்படும். மேலும் வெளிப்புற ஆகாரங்கள், எண்ணெய்ப்பலகாரங்களை தவிர்த்து நார்ச்சத்து மிகுந்த வீட்டு உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் நன்மை தரும். பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள மேலும் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். குறிப்பாக கால்சியம் நிறைந்த உணவு, வைட்டமின் டி உணவுகள் பெண்களின் ஆரோக்கியமான உறக்கத்துக்கு வழிவகுக்கும். 30 வயதுக்கு மேல் கால்சியம் குறைபாடு குறித்த சோதனைகள் செய்துகொள்வதன் மூலமும் கூட துவக்க நிலையிலேயே தூக்கமின்மை பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மொபைல், கணினி, டிவி இவைகளை தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒதுக்கி வைப்பது மிகவும் நல்லது.
– அ.ப.ஜெயபால்.

The post அமைதியான உறக்கமே ஆரோக்கியம்! appeared first on Dinakaran.

Read Entire Article