புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடதப்பட உள்ளதாக ஒன்றிய வௌியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த மாதம் 20ம் தேதி பதவி ஏற்ற டிரம்ப், அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். கடந்த 5ம் தேதி அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே அமெரிக்க அறிவித்தபடி சி-17 ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்டு, அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பெரும் அதிர்வலையையும், சர்ச்சையையும் எழுப்பி உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்பில் உள்ளோம். இந்தியர்களுக்கு கை விலங்கிடப்பட்டது பற்றி அமெரிக்காவிடம் இந்தியா வேதனையை வௌிப்படுத்தி உள்ளது. மேலும், நாடு கடத்தப்படுபவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மேலும் 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அவர்களில் எத்தனை பேர் அழைத்து வரப்படுவார்கள் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை.
2012ல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்பும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள் சற்று வேறுவிதமாக உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் இந்தியர்களை நாடு கடத்தும் போது முறையாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்கா அனுப்பும் ஏஜென்சிகள்
கனடா கல்லூரிகளில் போலிச்சேர்க்கை மூலமாக அமெரிக்காவிற்குள் நுழைய உதவும் இந்தியா, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஏஜென்சிகள் மற்றும் உதவியாளர்களின் சங்கிலி தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 8500க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் அமலாக்கத்துறை விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் உள்ளன.
மேலும் 2023ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 35 சோதனைகள் நடத்தப்பட்டு ரூ.92லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு நிதி அனுப்ப உதவும் சில சர்வதேச நிதி நிறுவனங்களும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளன.
The post அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தல்: வௌியுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.