அன்னை சத்யா விளையாட்டரங்கில் துவங்கியது முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

1 week ago 10

*3,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

*அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி துவங்கியது. 3,300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் துவக்கி வைத்தார்.தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25 நேற்று தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். விளையாட்டு போட்டியை தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கூறியதாவது, இப்போட்டிகள் 24.09.2024 வரை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து, ஆக்கி, கபடி, நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கேரம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி ஆகியவை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதேபோல் பரிசுத்தம் பொறியியல் கல்லூரியில் கால்பந்து போட்டியும், பூண்டி புஷ்பம் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டியும், பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கைப்பந்து போட்டியும், நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோ-கோ விளையாட்டு போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 3 ஆயிரத்து 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நேற்றும், இன்றும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் 13.09.2024, 14.09.2024 ஆகிய நாட்களில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தடகள போட்டிகள் நடக்கிறது. இன்று (புதன்கிழமை) பள்ளி மாணவிகளுக்கு கூடைப்பந்து போட்டி, ஆக்கிப்போட்டி, கபடி, நீச்சல், கேரம், வாலிபால், நீச்சல் போட்டி ஆகியவை அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், கிரிக்கெட் போட்டி மருத்துவக்கல்லூரியிலும், பூண்டி புஷ்பம் கல்லூரி, கால்பந்து போட்டி பரிசுத்தம் பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது. இந்த போட்டி வருகிற 24ம் தேதி வரை நடக்கிறது என தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், நீச்சல் பயிற்றுநர் ரஞ்சித் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post அன்னை சத்யா விளையாட்டரங்கில் துவங்கியது முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article