சென்னை: “சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. ஃபென்ஜல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயல் காரணமாக, கடலோர மாவட்டங்களில் காற்றின் தாக்கமும் இருக்கும், மழையின் தாக்கமும் இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார் .
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறிய: “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஃபென்ஜல் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது சனிக்கிழமை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.