50 மருந்துகள் தரமற்றவை: மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு

2 hours ago 5

புதுடெல்லி,

இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, மருந்து தயாரிப்புகள் தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மருத்துகள் தர நெறிமுறைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால் அவை தரமற்றவை என்பது உறுதியாகி உள்ளது.

அதில், 50-க்கு மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை என்று கூறப்பட்டுள்ளது. அவற்றில், பாராசிட்டமால், பான் டி, ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், விட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், விட்டமின் சி, விட்டமின் டி3, நீரிழிவு நோய் மாத்திரைகள், சிப்ரோபிளாசாசின் ஆகியவை அடங்கும்.

உயர் ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் மாத்திரைகளான டெல்மிசர்டான், அட்ரோபின் சல்பேட், ஆன்டிபயாடிக் மாத்திரைகளான அமோசிசில்லின், பொட்டாசியம் கிளாவலனேட் ஆகியவையும் தரமற்றவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கண்ட தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்களில் ஆல்கம் லேபரட்டரிஸ், இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட், கர்நாடகா ஆன்டிபயாடிக்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மருந்து உரிம அதிகாரிகள், ஆகஸ்டு மாதத்துக்கான தரமற்ற மருந்துகளுக்கான தரவுகளை இன்னும் அனுப்பி வைக்கவில்லை என்று மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய சந்தையில் "மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய" 156 க்கும் மேற்பட்ட நிலையான டோஸ் மருந்து கலவைகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்தது. இந்த மருந்துகளில் பிரபலமான காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணிகள் மற்றும் ஒவ்வாமை மாத்திரைகள் அடங்கும்.

Read Entire Article