27-ந் தேதி திருப்பரங்குன்றம் மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா

2 hours ago 3

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் தனி சன்னதியும், காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளமும் (சுனையும்) அமைந்துள்ளது.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறும் தெய்வீகப் புலவர் நக்கீரரை கற்முகி என்ற பூதம் தொட்டு அவரது தவத்தை கலைத்த பாவ விமோசனத்தை போக்கிடுவதற்காகவே முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள "வேல்" கொண்டு பாறையை பிளந்து மலை உச்சியில் காசிக்கு நிகரான கங்கை (சுனை) தீர்த்தத்தை உருவாக்கினார். அதுதான் இன்றளவும் வற்றாத புனித தீர்த்த குளமாக இருந்து வருகிறது.

இத்தகைய வரலாற்று புராணத்தை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா வருகின்ற 27-ந்தேதி நடக்கிறது.

அன்று காலை 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கத்தில் ஆன வேல் எடுத்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்த குளத்தில் அந்த வேலுக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது.

இதனை தொடர்ந்து மலை மேல் குமரர் சன்னதியில் குமரருக்கும், வேலுக்குமாக அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. அதன்பின்னர் மாலையில் மலை உச்சியில் இருந்து வேல் எடுத்து வந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சகல பூஜையும், சர்வ அலங்காரமும் தீபாராதனையும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து இரவில் பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகர்வலம் சென்று இருப்பிடம் அடைகிறது. 27-ந்தேதி அன்று கோவில் கருவறையில் அபிஷேகம் நடக்காது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Read Entire Article